உயிருடன் நகக் கண்ணை பிய்ப்பார்களாம், போர்களத்தில் தோற்றவனுடைய நகக் கண்ணை…. அப்படி யாரும் ஸ்வேதாவின் நகங்களை வேறோடு பிய்த்துவிட்டார்களா? 'கவி ராஜாத்தி' “கவிக்குட்டி” "என் அறிவுக்கிளி' என்று கொஞ்சியவள் எப்படி ஊமையானாள்?
ஸ்வேதாவின் இதயம் அதன் கூட்டை விட்டு உலாவப் போனதோ? சுடுகாட்டில் உலாவுகிறதோ? இல்லை, அவள் கணவனை வழியனுப்பும் முன் அவனுடன் சென்ற அந்த முக்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் விட்டதோ? கோவிலுக்குத்தான் போயிருக்க வேண்டும்! ஏனென்றால் மூச்சு வருகிறதே.. உயிர் இன்னும் இருக்கிறதே… ஆதலால் அவள் இதயம் முக்தீஸ்வரன் கோயிலுக்குத் தான் போயிருக்க வேண்டும்.
கவியால் ஸ்வேதாவைச் சமாதானம் செய்ய முடியவில்லை. ஆச்சியிடம் எல்லா சத்தியமும் செய்தாள். பிரேமைப் பற்றி நினைக்க இது நேரமில்லை என்று அவன் நினைப்பைத் தள்ளி வைத்தாள்.
ஆச்சி ஸ்வேதாவிடம் பேசிப் பார்ப்பதாகச் சொன்னார். இருந்தாலும் கவிக்கு மனதில் துளிகூட நம்பிக்கையில்லை. அம்மாவை அசைக்க ஒரு வியூகம் கிடைத்தால் போதுமே என்றிருந்தது.
அறிவாளிகள் எப்படி பிறரை தன்னை அறிவாளி என்று நம்பவைப்பார்கள்?
பிறரை எப்படி ஆச்சர்யப்படுத்துவது என்று யோசிப்பார்கள். உண்மையை மட்டும் பேசி மற்றவர்களை நம்ப வைப்பார்கள்.குற்றவாளிகள் எப்படி பிறரை தனது குற்றம் குற்றமே இல்லை என்று நம்பவைக்க யோசிப்பார்கள்?
தனது பசி, பணத்தின் தேவை ஆகியவற்றைக் கூறி தனது குற்றத்தை நியாயமாக்கப் பார்ப்பார்கள். அறிவாளிக் குற்றவாளிகள் என்ன செய்வார்கள்? உண்மையை ஒளிக்காமல் சொல்லி, ஆச்சர்யப்படுத்தி, பிறகு தனது பலவீனத்தின் மேல் பழி போட்டு நம்ப வைப்பார்கள்.கவியும் இதையே செய்தாள்.
"அம்மா நான் பிரேமிடம் ஆறுமாசம் தான் பழகினேன். அவனுடன் பழகியது தப்புதான்.. அது ரொம்ப தப்பு.. என் வயதில் வரும் கோளாறுதான் என்று நான் புரிந்து கொண்டேன். தப்பு செய்ய பிரேம் தூண்டியிருந்தால் கூட நான் தப்பு செய்திருக்கக் கூடாது. ப்ளீஸ் என்கூட பேசுங்களேன்.."
"நான் நிச்சியம் இனி பிரேமை பார்க்க மாட்டேன். டாட் ப்ராமிஸ். ப்ளீஸ்.. ப்ளீஸ்ம்மா"
