சுதாவுக்கு இன்ஜினியரிங் முடித்தவுடன் ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது. வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமும் ஆகிவிட்டது. கவிக்கு எப்போதும் காலாவதியாகாத ஏ.டி.யம் கார்ட் அவள். கவி நல்ல சாப்பாட்டு பிரியை. மதுரையின் சிறந்த ஹோட்டல் அனைத்திலும் தண்ணீராவது குடித்துவிடுவாள். சுதாவும் கவியும் எங்கு சென்றாலும் 'பல்லவன்' தான். 'பல்லவன்' புகாத இடங்களுக்கு ஷேர் ஆட்டோ, கவிக்கு மாதா மாதம் அப்பா அனுப்பும் தொகை ஒருவருக்கு மிகவும் அதிகம் தான். ஆனால் கவி அதை முகம் வாடிக்கிடக்கும் பூக்காரம்மாவுக்கும், பேப்பர் போடும் சிறுவர்களுக்கும் கொடுத்தால்?, இது போக அவள் புத்தகங்கள் செலவு.
இதை அறிந்த சுதா காரணம் கேட்காமல் கவிக்கு பணம் தேவைப்பட்டால் கொடுத்து விடுவாள்.
2018
மீனாட்சி மிஷன் மருத்துவமனை
கவி தனது கைப்பையை எடுத்துக்கொண்டு இரண்டு தளங்கள் தாண்டியிருக்கும் குடல்பிரிவு பகுதிக்கு செல்வதற்காக லிஃப்டிற்கு காத்துக் கொண்டிருந்தாள். லிஃப்ட் வந்ததும் அதில் ஏறினாள்.எங்கும் ஒரே நோயாளிகள் கூட்டம்தான். கல்லூரிப் படிப்பு முடிந்து, அரசு மருத்துவமனையில் ஒரு வருட பயிற்சிக்குப் பிறகு P.G படிக்க எண்ணினாள். சரி படிக்கும் நேரம் தவிர சும்மாயிருப்பானேன் என்று மதுரை மீனாட்சி மிஷனில் விண்ணப்பித்தாள். உடனே அவளது விண்ணப்பம் ஏற்கப்பட்டது.
அமெரிக்காவில் மேற்படிப்பு மிகுந்த செலவு வைக்கும். அதனால் வேலைக்குச் செல்வது மிகவும் அவசியம் என்று தோன்றவே உடனே கிடைத்த பகுதி நேர வேலையில் சேர்ந்தாள்.
வேலையில் முதல் நாள். லிஃப்டில் அவள் முதல் நாள் தொடங்கியது. அவள் எதிரே நின்ற லிஃப்ட் ஆப்ரேட்டர் சொன்னார். "வண்டியில் நூற்றி இருபதில் போகுதுங்க இந்த விடலைப் பசங்க… அப்புறம் நூற்றியெட்டில் இங்கு வந்து படுத்துக்குறாங்க.. இன்னைக்கு மட்டும் மூன்று ஆக்சிடென்ட் கேஸ்."
