கல்லூரியின் முதல் ஆண்டு. . . .
கவியின் முயற்சிகளுக்கு கிடைத்த பரிசு. அந்த பரந்து விரிந்த கல்லூரி வளாகம். எவ்வளவு உழைப்பு? இந்த தருணத்திற்காக! எத்தனை தியாகங்கள்! அனைத்தும் இந்த கல்லூரிக்குள் நுழைவதற்காக.. அனைத்து உழைப்புகளும் நிச்சியம் அதன் பயன்களைப் பெற்று விட்டன என்று எண்ணிக் கொண்டாள். கல்லூரியின் அலுவலக அறைக்குச் சென்று தனது பெயரைச் சொல்லி தனது வகுப்பறை, பிரிவு மற்றும் விடுதி விபரம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.தனது வகுப்பறைக்குள் நுழையும் போது மழலையர் பள்ளிக்குள், அவள் சிறு பிள்ளையாக இருந்தபோது முதல் நாள் சென்றபோது வந்த பயம் போல, ஒரு பயம் மனதில் தோன்றியது. வகப்பறையின் அமைதி அவளுக்குப் பிடிக்கவில்லை. ஒவ்வொருவராக வகுப்பறைக்குள் வரவர கொஞ்சம் பயமும், கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற உணர்வும் அவளைச் சூழ்ந்து கொண்டது.
அவள் பக்கத்தில் மதுமித்தா வந்து அமர்ந்த வேகத்தில் கையை நீட்டி "என் பெயர் மதுமித்தா நீதான் கவிதாவா?" என்ற கேள்வியோடு தனது அறிமுகத்தைத் தந்தாள். கவிக்கு மதுமித்தாவின் இனிய அனுகுமுறை அவளை எளிதாக இயல்பாக்கியது. உடனே தனது தயக்கத்தை தள்ளி வைத்துவிட்டு கையை நீட்டி, "ஆம் நான் கவிதா. கவி என்றுதான் எல்லோரும் கூப்பிடுவாங்க. நீ எந்த பள்ளியில்?" என்று கேட்டு முடிக்கும் முன் பதில் வேகமாக வந்தது.
"மதுரையின் ST. Joseph..."
"அப்படியா? என் அம்மா கூட அந்த பள்ளியில் தான் படித்தார்களாம். அங்குபோல் ஒழுங்கு எங்கும் இல்லை என்று எப்போதும் ஒரே பள்ளி புராணம்தான்!" இருவரும் பொதுவான விஷயங்கள் பேசி முடித்த கொஞ்ச நேரத்தில் விரிவுரையாளர் வந்து விட்டார்.
அவர் வகுப்பில் உள்ள அனைவரையம் தங்களைப் பற்றிய அறிமுகம் இரண்டு வரிகளில் கொடுக்கச் சொல்லி தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.அவரது கல்வித் தகுதியை கேட்டபிறகு இவர் இங்கே இந்தியாவில் என்ன செய்கிறார்? என்று கவி தன்னிடம் கேட்டுக்கொண்டாள்.
