திருமணப் பேச்சால் கோபம் கொண்ட கவி மீண்டும் தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று குறிப்பெடுக்க ஆரம்பித்தாள். ஒரு உள்நோயாளியின் டிஸ்சார்ஜ் சம்மரி தயார் செய்து கொண்டிருந்தார்கள். சுதாவிடம் பேசிவிட்டு கௌஷிக்கும் அவளுடன் இணைந்துகொண்டான். கவி முகத்தை இறுக்கமாக வைத்திருந்தாள். அவளுக்கு அந்தத் திருமணப்பேச்சில் அத்தனைக்கோபம். அகிலைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னதால் அவளுக்கு கோபம் இல்லை, அகில்... is a perfect gentleman. அவளைப் பற்றிய ரகசியங்கள் அனைத்தும் தெரிந்த சுதா எதுவுமே நடக்காததுபோல தனது திருமணப்பேச்சை எடுத்ததால் தான் கோபம்.
அகில் அறைக்குள் நுழையும்போதே கவியிடம் தலையசைத்து மௌனமாய் ஒரு குட்மார்னிங் சொன்னான். நேற்று இரவு நாராயணன் அவர்களுக்கு ஒரு அறுவை சிகிச்சையில் உதவியவன், அந்த சிகிச்சையின் ரிப்போர்ட்டுகளை சேகரித்து வருவதற்குள் மணி பதினொன்றானது. அறைக்குள் நுழைந்தவன் கவியும் கௌஷிக்கும் இறுகிய முகமாய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, ‘காரணம் என்ன?’ என்று சைகையில் கேட்டான்.
இருவரும் "ஒன்றுமில்லை" என்று சைகை பாஷையில் தோளைக் குலுக்கிச் சொன்னாலும்.. அவன் அதை நம்பவில்லை. ஆனால் நாராயணன் அவர்கள் மூவரையும் அதற்கு மேல் சைகை பாஷையில் பேச விடாமல் வேலை கொடுத்தார். கவியும் அகில் மேற்கொண்டு கேள்வி கேட்டு துளைக்காதலால் நிம்மதி அடைந்தாள். அகில் சுத்த சைவம். மதியம் கேன்டீனில் மூவரும் சைவ உணவு சாப்பிட்டுக்கொண்டே பேசினர்.
கௌஷிக் தண்ணீரைக் குடித்தபோது, அகில் அவனிடம் கேட்டான், "என்ன கௌஷிக் காலையில் அம்மாவுடன் ரொம்ப நேரம் ஃபோனில் பேசிக்கிட்டு இருந்த? ம்? என்ன விஷயம்?
கவிக்கு புரையேறியது... செருமினாள். கொஷிக்கை பார்வையால் "சொன்ன... செத்த.." என்று எச்சரித்தாள்.
கொஷிக் அகிலின் கேள்விக்கு அசடாய் சிரித்தான்.
"ஸ்வர்ணாவின் ஃபோன் நம்பர் அம்மாகிட்ட கேட்டியா? அம்மா நீ என்ன பேசின என்று சொல்ல மாட்டிக்கிறாங்களே.. ம்? விஷயம் என்ன?“
கவி மீண்டும் கண்ணால் கௌஷிக்கிடம் எச்சரிக்கை செய்தாள்.
“ஒண்ணும் பெருசா இல்லடா.”- கௌஷிக்.
“அப்படியா? உன்னோட அம்மா உன்னோட கல்யாண விஷயமா என்கிட்ட பேசுனாங்க கௌஷிக்..”
‘ஹா... ஹா... இரண்டுபேர் அம்மாவுக்கும் நம்மளை யார் கையிலயாவது பிடிச்சிக்கொடுக்கணும்னு ஒரே நேரத்துல தோணிருக்கு..’ என்று மனதில் நினைத்த கௌஷிக் அதைச் சொல்லாமல் சிரிக்க மட்டும் செய்தான்.
“ஸ்வர்ணா பற்றி உன்னோட அம்மா என்கிட்டச் சொன்னாங்க..” - அகில்.
“அப்படியா?”- கௌஷிக்.
“ம்... Yes. ஸ்வர்ணா ரொம்ப அமைதி. அவளுக்கு உன்னைப் பிடித்தால் நீ லக்கிதான். நீதான் காலம் முழுக்க பேசணும், அவள் வாயே திறக்க மாட்டா. உன் அம்மாவுக்குதான் ஸ்வர்ணாவை ரொம்ப பிடிக்குதாமே. நேற்று கூட என்னிடம் சொன்னாங்க. உன் அம்மா நல்லா செலக்ட் பண்றாங்கப்பா."
அப்போதும் கௌஷிக் மனதில் பேசிக்கொண்டான்,
"அகில், உன் அம்மா செலக்ஷன் இன்னும் டாப். நீங்கள் இருவரும் வாழ்நாள் முழுதும் பேசிக்கிட்டே இருக்கணும், வாழ்நாள் முழுதும் சண்டை போடணும் என்று உன் அம்மா ஆசைப்படுறாங்களே! அதற்கு என் அம்மாவை நான் கோயில் கட்டி கொண்டாடணும். என் தங்கக்குட்டி ஸ்வர்ணா இஸ் எ குட் சாய்ஸ். ஸ்வர்ணா இஸ் மை ஏன்ஜல். பிகாஸ் "ஏன்ஜல்" எப்போதும் கேள்வி கேட்பதில்லை. ஒரு அரை மணி நேரம் முன்பு நீ வந்திருந்தால் உனக்கும் விஷயம் புரியும். உன் அம்மா சுதாவிடம் சொன்ன மேரேஜ் ப்ரோபோசல் பற்றி உனக்குத் தெரியாமல் போனது நல்லது தான். விஷயம் தெரிந்து இப்போது தான் என்னையும் சுதாவையும் வெளுத்து வாங்கினா கவி..."
அகில் அதற்குப்பிறகு கௌஷிக்கின் திருமணப் பேச்சை பேசாமல் மருத்துவப் பணிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தான்.
கவி அவசரம் அவசரமாக சாப்பாட்டை மென்றும் மெல்லாமலும் இடத்தைக் காலி செய்தாள்.
கேன்டீனை விட்டுச் சென்றதும் கவி தனது வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். அவளைப் பொறுத்த வரை அகிலுக்கு விஷயம் தெரியாத வரையில் அவளுக்கும் நிம்மதியே. "நிம்மதி!", அதுதான் இன்று போய் நாளை வரும் என்ற உறுதி நமக்குத் தருவதில்லையே.
********
