மறுநாள் அகில் அவள் பக்கம்கூட திரும்பிப் பார்க்கவில்லை.
ஒரு நாள் கவி தனது கைபேசியை எங்கோ வைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்தாள். ஆலோசனை அறையில், அகிலும், கௌஷிக்கும் அவள் அருகில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். கவியின் தேடும் படலத்தைப் பார்த்து கௌஷிக் கேட்டான். "என்ன கவி முக்கியமானது ஏதும் காணலயா?"
"ஆமாம் கௌஷிக், என் செல்போனை தேடுகிறேன்."
கௌஷிக்கிற்கு கவியென்றால் ரொம்பப் பிடிக்கும். ஆனால் அவன் ஆறுயிர்த் தோழனுக்கும் கவிக்குமிடையே வானிலை சரியாக இல்லாத காரணத்தால் கொஞ்சம் அடக்கி வாசித்தான்.
கவி மிகவும் சோர்ந்து தெரிந்தாள். கௌஷிக்கிற்கு மனம் பொறுக்கவில்லை, சட்டென்று கேட்டான், "கவி உன் நம்பர் சொல்லு நான் ஒரு முறை அழைத்துப் பார்க்கிறேன்."
பிறகு தனது கைபேசியை எடுத்து அழைப்பு விடுக்க எண்ணி சட்டைப் பைக்குள் கைவிட்டான். செல்பேசி தவிர மற்ற அனைத்தும் இருந்தது. 'அடடா' என்றவன் சிறிதும் யோசிக்காமல் அவன் பக்கத்தில் இருந்த அகிலுடைய செல்பேசியை எடுத்து, "நம்பர் சொல் கவி என்றான்."
கவி தனது நம்பரைச் சொன்னாள். அகிலின் கைபேசியில் இருந்தே அழைப்பு விடுத்தான். அகில் அவன் கோப்புகளை குமியலாக வைத்திருந்தான். அதனடியில் கவியின் கைபேசி மாட்டிக் கொண்டிருந்தது.
“இதோ இங்க இருக்கு. அகில் அதை எடு.”- கௌஷிக்
கௌஷிக்கின் ‘உதவும்கரங்கள்’ அதிகாரத்தை நினைத்து கோபமாக கவியின் கைபேசியை எடுத்தான். கைபேசி இன்னும் சப்தம் கொடுத்துக்கொண்டே இருந்தது.“அதான் ஃபோன் கிடைச்சிடுச்சுல... கால்லைக் கட் பண்ணா என்ன?” என்று சலிப்புடன் மனதில் நினைத்தவன் கவியின் கைபேசியை எடுத்தபோது அதன் திரையைப் பார்த்து ஸ்தம்பித்தான்.
கௌஷிக்கும் கவியின் கைபேசித் திரையைப் பார்த்தான். அவனுக்கும் அதே அதிர்ச்சி...
ஏனெனில் கவியின் கைபேசித்திரை சொன்னது...
"B.F calling"
---------------------------
