சோதனைக் கூடத்தில் சுதர்சன் சார். . .
கை உறைகளைப் போட்டுக் கொண்டதும் சுதர்சன் சார் சொன்னார், "நான் இப்ப உங்களுக்கு இந்த காடிவரில் (cadaver – body of a dead person) இருந்து ஒரு லங்ஸ் டிசக்ட்(desect) செய்து காட்டப்போறேன். இரத்தம் எல்லாம் உறைந்து போய்விடும், இரத்தம் எப்படி உறைந்து இருக்குன்னு பாருங்க. அப்புறம் இந்த இன்டஸ்டைன்ஸ்.. பற்றிப் பார்ப்போம். சரியா? கவனமாக பாருங்க என்று கூறிக் கொண்டே லங்ஸ்சை "ஸகால்பெல்' (scalpel) கொண்டு பிரித்தெடுத்தார். பிறகு லங்ஸைப் பற்றி விளக்கினார்.
பல்மோனரி வெயின்ஸ், பல்மோனரி ஆர்டரீஸ் எங்கிருக்கும் என்பதை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட சரியாகச் சொல்லும் வண்ணம் விளக்கினார். கவியிடம் லங்ஸை கொடுத்து உடம்பில் இது எந்த இடத்தில் இருக்கும் என்பதை காண்பிக்கச் சொன்னார். கவி லங்ஸை தன் உடம்பின் மேல் வைத்து இருப்பிடத்தைச் சரியாகச் சொல்லி ‘வெரி குட்’ வாங்கிக் கொண்டாள்.
சுதர்சன் அனைவருக்கும் பொதுவான கேள்வி கேட்டார், பிறகு உடனடியாக அதற்கு தாமே விளக்கமும் தந்தார்."ஒரு சிறுவன் சில்லரைக் காசை விழுங்கி விடுகிறான். அவனது சுவாசக் குழாய்குள் அது சென்று விடுகிறது. நம்முடைய எந்த லங்ஸ்சில் அது இருக்கும்?”
“வலது லங்ஸ். ஏனெனில் அதுவே டிரக்கியாவுக்கு பக்கத்தில் உள்ளது.”
பிறகு இன்டஸ்டைன்ஸ் பிரித்து எடுத்துக் காண்பித்தார். "இதோ இந்த இன்டஸ்டைன்ஸ் கொஞ்சம் கொல கொலப்பாக இருக்கு. அதனால் தொட்டுப் பார்க்கும் போது கவனமாக இருங்க." என்று கூறிவிட்டு தனது விரிவுரையைத் தொடங்கினார்.
அந்த பயிற்சிக்கூடத்தில் இருந்த மாணவர்கள் அனைவரும் மனிதனின் ஒரு உறுப்பை கையில் வைத்திருக்கிறோம் என்பதை புத்திக்குள் ஏற்றாமல் லங்ஸ்ஸை ஆராய்ந்தனர். சுதர்சன் சார் அதை எப்படி ஒரு பிறந்த குழந்தையைப்போல ஏந்திப் பிடித்திருந்தாரோ அதையே அவர்களும் பின்பற்றினார்கள். சுதர்சன் சார் மாணவர்களை தனது புத்திசாலித்தனத்தால் வசியம் செய்திருந்தார். நாட்கள் அவரது தயவால் 1000 வாட்ஸ் மின்சாரத்தின் வேகத்தில் நகர்ந்தது கவிக்கு.
*****