ஓம் பிரகாஷ் திருமணம். . .
ஓம் பிரகாஷ் திருமணத்திற்கு அகில், அவன் அம்மா, கௌஷிக், கவி எல்லோரும் சென்றார்கள். கல்யாணப் பெண் ஒரு விதவையாம், ராணுவ அதிகாரியாம் அவள் இறந்த கணவன்.
அரசல் புரசலாக அவர்கள் காதில் விழுந்தது. கவி கொஞ்சம் கூட தயங்கவில்லை நேரே மேடைக்குச் சென்று ஓம் பிரகாஷ் கையைப் பிடித்து வாழ்த்து சொன்னாள். புகைப்படம் எடுத்துக் கொண்டாள். மெடிக்கல் இன்சூரன்ஸ் பற்றி ஐந்து நிமிடம் அவர்களுடன் பேசினாள். அகிலும் பிரகாஷுடன் கொஞ்சம் பேசிவிட்டு வந்தான்.கவி அகிலிடம், "உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்"
"என்ன?"
"இன்று ஓம் பிரகாஷ் திருமணம்… உன் வீட்டு வேலைக்கார அம்மாவிடம் இரண்டு நாட்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து உன் அம்மா பாலில் கலக்க சொல்லியிருக்கேன்."
"ரொம்ப தாங்ஸ் கவி! என் பாலில்?"
"ச்ச.. ச்ச.. நீ டாக்டர் கண்டுபிடிச்சிடுவ இல்ல? அப்புறம் நீ ரொம்ப மனதிடம் உள்ள ஆளு.."
"டபுள் தாங்ஸ்... that is a good compliment actually..."
அகில் கவியை ஆசையாய் பார்த்தான். ஆனால் கவி கௌஷிக்குடன் அரட்டையடிக்க ஆரம்பித்தாள். அகிலின் காதல் பார்வை இப்போதெல்லாம் கவிக்கும் புரிய ஆரம்பித்துவிட்டது. ஆனால் அவள் மௌனம் சாதித்தாள்.
"நோ. என் பதில் ஷ்டிரிக்ட் நோ, நான் உன்னை கல்யாணம் செய்ய மாட்டேன் அகில்!" என்றாள் கவி மனதுக்குள்.
"நான் உன்னை கல்யாணம் பண்ண நினைக்கலயே! உன் கூட எப்போதும் பேசணும். உன் கூட வாக்குவாதம் பண்ணணும். என் நண்பர்கள் உனக்குப்பிடிக்கணும். என் திறமைகளை நீ மெச்சணும். என் இரவுகளை நீ உன் இரவுகளோடகோர்க்கணும்.. என்று தானே நினைக்கிறேன். இதற்கு பெயர் தான் கல்யாணம் என்றால்.. நீ நினைப்பது சரியே. நான் உன்னை சர்வ நிச்சயமாய் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறேன்!" - என்றான் அகில் மனதுக்குள்.
