நிழல் - 1

227 7 0
                                    


கதிரவன் கடலன்னையை தொட்டு முத்தமிட்டு அவளுள் இறங்கி மறைய அனுமதி கேட்டு கொண்டிருந்த அழகான அந்தி மாலை பொழுது, உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா கடற்கரையில் தனியாக அமர்ந்து கடலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

கடலலை எனும் காதலன் தன் கரைக் காதலியை தொட்டு தழுவி முத்தமிடும் ஆவலில் ஆர்ப்பரித்து வருவதும்... அவளுடன் சேர்ந்திருக்க முடியாத சோகத்தோடு திரும்புவதும் மீண்டும் முன்பை விட வேகமாக வருவதுமாக இருக்க... அதை பார்த்துக் கொண்டிருந்தவனின் மனது அந்த கடல் அலைகளை விட அதிகமாக ஆர்பரித்துக் கொண்டிருந்தது.

நான்கு வருடத்திற்கு பிறகு இன்று காலை தான் மறுபடியும் சென்னை வந்திருக்கிறான்.. ஓரிரண்டு முறை வேலை விசயமாக வந்து சென்றிருக்கிறான்... ஆனால் முழுதுமாக இப்போது இங்கேயே தன் ஜாகையை மாற்றி வந்ததும் பழைய நினைவுகளின் தாக்கத்தில் வீட்டில் இருக்க பிடிக்காமல் இங்கு வந்து விட்டான்... மனதின் அலை ஓயாதிருக்க நெடு நேரமாக கடலையே வெறித்துக் கொண்டிருந்தான்.

அன்று ஞாயிற்று கிழமை என்பதால் ஆங்காங்கே மக்கள் கூட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டும், வயது பாரபட்சம் இல்லாமல் கடல் அலையில் நனைந்து விளையாடுவதுமென அவன் பார்க்குமிடமெல்லாம் உற்சாகம்.

அவனால் தான் எதையும் அனுபவிக்க முடியவில்லை. எத்தனையோ நாட்கள் அவனும் இதை விட உற்சாகமாக அலையில் விளையாடியிருக்கிறான்... நண்பர்களோடு கும்மாளமிட்டுருக்கிறான்... அந்த நாட்கள் திரும்ப வருமா?... ஏக்கத்தோடு நினைத்தவன் மனதின் வேதனை முகத்தில் வெளிப்பட்டது.

இவன் கடலை வெறிக்க சிறிது தூரத்தில் அவனின் கண்ணில் படாதவாறு அமர்ந்திருந்த அவள் அவனுக்கு சற்றும் குறைவில்லாத மன வேதனையுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் பார்த்தால் தெரியாதவாறு தன் முகத்தை துப்பட்டாவால் மறைத்திருந்தாள்.

அவன் சென்னை வந்திருக்கும் விஷயம் அறிந்ததும் அவனை இங்கே எதிர் பார்த்தே அவளும் வந்திருந்தாள்.

நிழலே நெருங்காதே!!Where stories live. Discover now