அமைச்சர் வீட்டிலிருந்து கிளம்பிய ஷிவேஷின் கார் அலுவலகம் செல்லும் பாதையில் செல்லாமல் வேறு புறம் செல்லவும்...
ஹரி "என்னடா இந்த பக்கம் திரும்புற?" என்றான்.
"ஒண்ணுமில்லை... ஒரு சின்ன விஷயம் முடிச்சுட்டு ஆபீஸ் போகலாம்" என்றான் ஷிவேஷ்.
"என்ன விஷயம்?" ஹரி
கார் செல்லும் திசையை பார்த்த ஷிவானி "ஹரிண்ணா, சார் சென்னையில் வந்திறங்கியதுமே வேலையை ஆரம்பிச்சுட்டார்... நேற்று பீச்சில் ஒருத்தனுக்கு கொடுத்த அடிக்கு இப்போது வைத்தியம் பார்க்க போகிறார்... ஆனாலும் பாருங்கண்ணா, சார் கண்ணுக்கு தான் இந்த மாதிரி விஷயங்களெல்லாம் கரெக்டா தெரியும்... இப்போ இந்த கேஸும் அதே மாதிரி... சும்மாவே சார் ஆடுவர்... இப்போ என்ன வேணாலும் பண்ணிக்கோங்க... கேஸை சீக்கிரம் முடிக்கணும்னு சொல்லி கமிஷனர் வேற சலங்கை கட்டி விட்டுட்டார்... ம்ம்ம்.. உங்களுக்கு விசாரிக்கவாவது அந்த வருண் உயிரோட கிடைச்சா சரி" என்றாள்.
"வாயை மூடிட்டு போடி!... நேற்று பீச்சில் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தவ தானே நீ?... இப்போ மட்டும் எதுக்கு பேசுற?..., அப்படி என்னடி உன்னை பண்ணிட்டேன் நான்?... உன்னால நான் நிம்மதியில்லாமல், தூக்கம் கெட்டு தவிக்கிறது எனக்கு மட்டும் தான் தெரியும்... என்னை பற்றி எல்லாம் தெரிஞ்ச மாதிரி... பெருசா பேசுறா பேச்சு... ஏதாவது பேசினா பார்த்துக்கோ... ஹரி! இவளை என்கிட்ட பேச வேண்டாம்னு சொல்லு... மீறி பேசினா கோபத்தில் அடிச்சாலும் அடிச்சிருவேன்... இந்த கேஸை முடிச்சிட்டு திரும்பவும் ட்ரான்ஸ்பர் கேட்க போறேன்... இவ பார்த்த வேலைக்கு இவளை பார்க்க கூட பிடிக்கலை" என்றான் ஷிவேஷ்.
அதை கேட்ட ஷிவானியின் முகம் சுருங்கிவிட்டது.
"உனக்கு ஏன்டா இவ்ளோ கோபம் வருது? கண்ட்ரோல் யுவர்செல்ப் ஷிவா!. அவளும் பாவம் தானே!... உன்னை விட்டு அவள் என்ன சந்தோசமாவா இருக்கிறாள்?... இனி நாங்க உன்னை எங்கேயும் போக விட மாட்டோம். போறதா இருந்தா ரெண்டு பேரும் சேர்ந்தே போங்க... என்னால் உங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்க முடியல... என்னை பிருந்தா (ஹரியின் மனைவி) டெய்லி திட்டி தீர்க்கிறா... உனக்கும் தர ரெடியா இருக்கா... வீட்டுக்கு வர சொல்லிருக்கா. வா வந்து வாங்கிட்டு போ...". என்று ஏதோ கிஃப்ட் வாங்க வர சொல்வது போல் சொன்னான் ஹரி.