சூரஜின் அறையிலிருந்து எடுத்த புகைப்படதில் வீராசாமி வருணை அடையாளம் காட்டவும் ஷிவேஷ்வரன் கமிஷனருக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்து வருணை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக கைது செய்யப் போவதாக தெரிவித்தான். அவரும் அதற்கு ஒப்புதல் அளிக்க இருவரும் அங்கிருந்து கிளம்பி வருணின் கடையை வந்தடையும் நேரம் வருண் வெளியே கிளம்பி கொண்டிருந்தான்.
போலீஸ் ஜீப் தன் கடை முன்னே வந்து நிற்கவும் வெளியே வந்த வருண் தடுமாற்றத்துடன் மறுபடியும் உள்ளே சென்றான். அவன் தடுமாற்றத்தை கவனித்தவாறு அவனை தொடர்ந்து உள்ளே வந்த ஷிவேஷ்வரன் கடையை நோட்டமிட... அங்கே வருணும் நேற்று இவர்கள் வரும் போது இருந்த பையனும் நின்றனர்.
அந்த பையன் ஷிவேஷ்வரனை கண்டதும் வருணின் காதில் "அண்ணா நேற்று நைட் இந்த சார் தான் உங்களை தேடி வந்தாங்க" என்று கிசுகிசுத்தான்.
நேற்று இரவு போலீஸ் தன்னை தேடியது என்று காலையில் கடையிலுள்ள பையன் கூறியது, சூரஜின் மரணம் எல்லாம் சேர்ந்து வருணின் மனதில் பயம் குடிகொண்டிருந்தது.. ஆனாலும் தான் செய்த தவறுகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்ற தைரியத்திலிருந்தான் வருண்.
அவனுக்கு தெரியாதது தனுஜாவை மிரட்டியது ஷிவேஸ்வரனுக்கு தெரியும் என்பதும், சூரஜின் பங்களாவிற்கு அவன் செல்லும் போது வீராசாமி அவனை கவனித்ததும். வீராசாமி வெளியே வந்த பின்னரே இவன் உள்ளே நுழைந்தது... மேலும் இவனுக்கு கேட் திறந்தது விட்டது சூரஜ்... அதனால் வருணுக்கு வீராசாமி அவன் வரவை கவனித்தது தெரியவில்லை. அந்த தைரியமெல்லாம் ஷிவேஷ் - ஹரியை பார்த்ததும் தகர்ந்தது. அவன் பயத்துடன் இருவரையும் பார்க்க...
ஷிவேஷ் அவன் அருகில் வந்து "நீதான் வருணா?... போகலாமா?" என்று வருணை பார்த்து கேட்க..
"எங்கே சார்?..." என்று மென்று முழுங்கி கேட்டான் வருண்.
"வேற எங்க மாமியார் வீட்டுக்கு தான்... சூரஜ் உன் பிரண்ட் தானே? அப்படின்னா இந்நேரம் உனக்கே நாங்க எதுக்கு வந்திருக்கோம்னு புரிஞ்சிருக்கணுமே அப்புறம் என்ன எங்கேன்னு கேள்வி?.. நீயா அமைதியா வண்டில ஏறினால் எனக்கு வேலை மிச்சம். இல்லேன்னா..." என்று அவனை ஒரு பார்வை பார்த்து தன் கையில் அணிந்திருக்கும் காப்பை மற்றொரு கை கொண்டு மேலேற்றி முறுக்க... அதற்கு மேல் பேச வருணால் முடியவில்லை. எதுவாக இருந்தாலும் அவர்களுடன் செல்வது தான் தற்சமயம் தனக்கு நல்லது... பின் தன் வழக்கறிஞ்சரை வைத்து பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தான். பாவம் அவனுக்கு தெரியவில்லை இனி அவன் யாருடனும் பேச முடியாது என்று.