வடபழனி முருகன் கோவில் அன்று வெள்ளிக்கிழமை காலை என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது...
ஷிவானி கோவிலுக்கு விஜயலக்ஷ்மி வர சொன்ன நேரத்திற்கு முன்பே வந்தவள் கோவிலினுள் சென்று வணங்கி விட்டு அவர் காத்திருக்க சொன்ன இடத்தில் வந்து அமர்ந்து முதல் நாள் இரவு ஷிவேஷ்வரன் பேசியதை நினைவு கூர்ந்தாள்...
பிருந்தாவை ஹரி வீட்டில் விட்டு விட்டு அவள் வீட்டிற்கே அவளின் அம்மாவின் வற்புறுத்துதலால் வந்தவளை பிருந்தாவின் அறையில் தங்க சொல்ல... ஷிவானியும் இருந்த களைப்பில் உடை மாற்றி படுத்து விட்டாள்.... தூக்கம் கண்ணை கட்டும் சமயம் ஷிவேஸ்வரனின் அழைப்பு வர, வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டோமா? என்று கேட்கத்தான் அழைக்கிறான் என்று எண்ணியவள்... அழைப்பை ஏற்று "வீட்டுக்கு வந்துட்டோம் ஷிவா... தூங்க போறேன்" என்று அவன் கேட்கும் முன் பதிலளித்தாள்.
அவன் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் "ஹனி!!" என்றழைக்க...
அவனின் அழைப்பின் வித்தியாசத்தை அறிந்தவள் "என்ன ஷிவா ஏதாவது ப்ராப்ளமா?" என்றாள்.
"ம்ம் அம்மாக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிருச்சு... இன்னைக்கு நம்ம ரெண்டு பேரையும் மண்டபத்தில் கவனிச்சிருக்காங்க... அதில் அவங்களுக்கு சந்தேகம் வந்துருச்சு... நான் இப்போ வீட்டுக்கு வந்ததும் கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க..." என்றவன் அவனுக்கு அவனின் மாமா மகளை திருமணம் பேசியதை அவள் வருத்தபடுவாள் என்று மறைத்துவிட்டான்.
"ஒஹ் அத்தை என்ன சொன்னாங்க ஷிவா?..." என்றாள். வேறு எதுவும் அவளுக்கு கேட்க தோன்றவில்லை... எதுவாகினும் அவனின் வார்த்தைகளின் மூலமே தெரிந்து கொள்ளலாம் என்று முடிவில் இருந்தாள்.
"நான் உன்னை பற்றி எல்லாமே சொல்லிட்டேன்... கேட்டவங்க எதுவும் எதிர்த்து சொல்லவில்லை... உன்னை பார்த்து பேசுங்க உங்களுக்கு பிடிக்கும்னு நான் சொன்னதற்கு, நாளைக்கே உன்னை வடபழனி கோவிலில் சந்திக்கிறேன்னு சொல்றாங்க... உன்னை காலையில் அங்க வர சொல்லறாங்க..."