ஷிவானி தன் முன் தலைகுனிந்து அமர்ந்திருந்த தனுஜாவை கூர்ந்து நோக்கினாள்... வீடியோவில் பார்த்த தனுஜாவிற்கும் இப்போது தன் முன்னால் இருப்பவளுக்கும் நூறு வித்தியாசம் சொல்லலாம்... அந்த அளவிற்கு மெலிந்து கண்களில் ஜீவனே இல்லாமல் உணர்வற்ற நிலையில் இருந்தாள்... தன் அந்தரங்கமான மறுமுகம், ஒரு சிலருக்கே என்றாலும் அடுத்தவருக்கு தெரிந்து விட்டது... என்ற நிலையை அறவே வெறுத்து மீண்டும் தன்னை அழித்துக் கொள்ளலாமா?... என்ற எண்ணம் மேலோங்கியது.
கமிஷனர் கேஸை பற்றிய விவரங்களை சொல்லி முடித்த அடுத்த நிமிடம் ஷிவேஷ்வரன் வேலையில் இறங்கி விட்டான். தனுஜாவிடம் அவன் பேசுவது சரி வராது என்று ஷிவானியை அனுப்பியிருந்தான்.
அவன் அமைச்சரிடம் அனுமதி கேட்டு தனுஜாவிடம் ஷிவானியை அனுப்பி விட்டு ஹரியுடன் அவரை விசாரிக்க ஆரம்பித்தான்.
ஷிவேஷ் அமைச்சரிடம் "சொல்லுங்க சார் என்ன நடந்துச்சு?... நீங்க சொல்ற தகவல்கள் மட்டுமே எங்களுக்கு குற்றவாளியை கண்டுபிடிக்க சரியான முறையில் உதவும்... கமிஷனரும், ஹரியும் எல்லாவற்றையும் சொன்னாங்க. இருந்தாலும் நானே கேட்டு தெரிஞ்சுக்கிட்டா... எனக்கு இன்னும் உதவியா இருக்கும்."
"தம்பி இரண்டு வாரத்திற்கு முன்பு ஒரு நாள் நான் வீட்டில் இருக்கும் போது என் பொண்ணு ஆஃபீஸிலிருந்து கலங்கிய முகத்துடன் வந்தாள்... நான் என்னன்னு கேட்டதுக்கு... ஆபீஸ் டென்ஷன்னு சொன்னா... நான் எதுனாலும் சரி பண்ணலாம்மா, நீ கவலைப்பட்டு உடம்பை கெடுத்துக்காதே!... என்ன விஷயம்? சொல்லுன்னு கேட்டேன்... ஒண்ணுமில்லப்பா நான் சரி பண்ணிடுவேன்... முடியலேன்னா சொல்றேன்னு சொல்லிட்டு ரூம்க்கு போய்ட்டா...
என் மனைவி இவளுடைய 17வது வயதில் இறந்துட்டாங்க. இப்போ 24 வயதாகுது... நான் அரசியலில் இருப்பதால் அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்..., அவள் தனியா இருப்பாள்ன்னு அவளோட மேற்படிப்பெல்லாம் ஹாஸ்டலில் தங்கி படித்தாள். படிப்பு முடிஞ்ச பிறகு வந்து பிசினெஸ் பண்றேன்னா... சரின்னு ஏற்பாடு பண்ணிக் கொடுத்தேன்... பிசினெஸ் நல்ல மாதிரி தான் போய்ட்டிருக்கு... கடந்த ரெண்டு மாசமா அவள் முகம் சரியில்லை... எப்போதும் ஏதாவது சிந்தனையாவே இருப்பாள்... என்னன்னு கேட்டா ஒண்ணுமில்லப்பான்னு சொல்லிடுவா...