5

279 12 0
                                    

'சடார்' என்று ஒரு சத்தம் கேட்க... அவ்விடம் அமைதியில் உறைந்தது. முரைத்துக் கொண்டு நின்றாள் ஆதிரா. பகலவனை இருள் சூழ்ந்ததாகத் தோன்றியது அவள் முகம். உடலின் குறுக்கே கிடந்த பையை சரி செய்து கொண்டு நடக்கலானாள்.

பின்னால் கைலியும் பனியனும் அணிந்திருந்த ஒருவன் தலையில் கையை வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

"ஏய் எதுக்கு மா இப்ப என் புருஷன அடிச்ச?" என்றொரு சத்தம் கேட்டது.

கண்களை உருட்டிக் கொண்டு திரும்பியவள், கோபத்தை முகத்தில் காட்டிக் கொண்டு அருகில் வந்துவிட்ட அந்தப் பெண்ணை நோக்கினாள். "நான் எங்க அவர அடிச்சேன்? அவர் தல மேல இருந்த ஈய தான அடிச்சேன்," என்றாள் கையில் சுருட்டி இருந்த நாளிதழைப் பார்த்தபடி.

கேள்வி கேட்டவளுக்கு மறுவார்த்தை சொல்லத் தெரியவில்லை. விழித்தாள்.

"ஈனால தேவை இல்லாத நோய் எல்லாம் வரும். அதுல இருந்து அவர காப்பாத்தி இருக்கேன். யு சுட் தாங்க் மீ," என்று அவள் கூற சுற்றி இருந்தவர்கள் சிரிக்கத் துவங்கினர்.

"இருந்தாலும்..." அந்தப் பெண் ஏதோ சொல்லப் போக, ஆதிராவின் கையில் இருந்த காகிதக் கட்டை அப்பெண்ணை பதம்பார்த்தது.

மணாளனைப் போலவே மண்டையைப் பிடித்தாள். "ஏமா இப்ப எதுக்கு என் பொண்டாட்டிய அடிச்ச?" கைலியை மடக்கிக் கட்டிக் கொண்டு அடித்துவிடப் போவதாய் பயத்தை ஏற்படுத்தினான்.

"அதே ஈ தான்..." சொல்லிவிட்டு அவள் வழியே திரும்பினாள். சுற்றம் பற்களை பளிச்சென காண்பித்தது.

"ஏய் நில்லுமா! என்ன நினைச்சுகிட்டு..." அவனைச் சொல்லி முடிக்கவிடவில்லை. கையை உயர்த்தி கோப வெள்ளத்திற்கு அணை காட்டினாள்.

"மத்தவங்க அடிச்சா கோபம் வருது ஆனா பாத்தா ப்ராப்லம் இல்லையா?" என்றாள்.

அப்போது தான் அவள் செய்கையின் முழு அர்த்தம் அவர்களுக்குப் புரிந்தது. உண்மையில் மண்டையில் அடித்தார் போலத் தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்தனர்... அத்தனை நேரம் பெரும் கூட்டத்திற்கு நடுவே குடும்பத்தகராறைக் கொண்டு வந்து, மனைவியை அடித்து, திட்டி, நான்கு சுவற்றுக்குள் போடவேண்டிய சண்டையை ஆயிரம் பேர் காண தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருந்தனர்.

காதல் கண்கட்டுதே (Completed)Where stories live. Discover now