20

142 11 0
                                    

"இப்ப நீ ஏன் கிளம்புற? இன்னும் கொஞ்சம் ரெஸ்ட் எடு. ஐ வில் ரைட் யூ எ மெடிக்கல் சர்டிஃபிகேட். ஏன் கேட்க மாட்டேங்கிற?" என்றான் ஆதித்யா. அவன் கண்களில் இருந்த உணர்ச்சிகள் உண்மையான அக்கறை என பறைசாற்றிக் கொண்டிருந்தது.

நீர்வீழ்ச்சியில் சந்தித்தது முதல் அவர்கள் உறவு சிறிது மாற்றத்தைக் கண்டது. இருவருக்கும் அது நல்ல மாற்றம் என்று தோன்றியிருக்க வேண்டும், அதைப்பற்றி இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அணைத்து, அறிவுரை கூறி, முத்தமிட்டவன் அதற்குமேல் அப்படியே நெருங்கி இருந்தால், வினை வேறுவிதமாகப் போய்விடும் என்று நினைத்து துரிதமாக அவளிடமிருந்து விலகினான். சகதியால் நடுவே ஏற்பட்ட தடங்களில் இருந்து பாதுகாத்து அவளை குடிலுக்கு அழைத்துச் சென்றான்.

இரவு பொழுது வானில் நட்சத்திரங்கள் மின்மினி பூச்சிகள் போல நிலவிடம் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தன. சந்திரன் பால்வடியும் வெள்ளி முகத்தை முழுமையாக நில மகளுக்குக் காட்ட முயன்று கொண்டிருந்தான்.

இரவு பயணத்திற்காக பேருந்து வரும் தனியார் அலுவலகத்தில் வெளியே இருவரும் அமர்ந்திருந்தனர். ஆதிராவின் அப்பா அறுவை சிகிச்சை ஒன்றில் சிக்கிக்கொள்ள, ஆதித்யாவுடன் ஆட்டோவில் கிளம்பினாள் ஆதிரா. அவன் எத்தனை சொல்லியும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

"ஒரு வாரம் லீவ் முடிஞ்சுச்சு," என்றே திரும்பத் திரும்ப கூறினாள்.

இறுதியாக ஒரு முறை கேட்டும் அதே பதில் உதிர, அதற்கு மேல் பேச எதுவும் இல்லை எனத் திரும்பிக் கொண்டான்.

பேருந்தும் வந்தது. வெள்ளை யானையைப் போல இருந்த சொகுசுப் பேருந்து. இருவரும் ஏறினர். அவனே முன்னால் சென்றான். இருவருக்கும் அருகருகே தான் இருக்கை போடப்பட்டிருந்தது. கொண்டு வந்த பையை மேலே இருந்த இடத்தில் திணித்து விட்டு, சற்று நகர்ந்து நின்றான். அவள் விழித்தாள் - எந்த இருக்கை என்பதை அறியாமல்.

அவள் தோளில் போட்டிருந்த பையை வாங்கிக் கொண்டு, 'இது' என கையால் உணர்த்தினான். ஜன்னல் ஓரம் சென்று அமர்ந்தாள். அவன் அவள் அருகில் அமர, அவன் மீது தெளித்திருந்த வாசனை திரவம் அவள் நாசிகளைத் துளைத்து சிந்தனையை கலங்கடித்தது. அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இத்தனை நாளாக அவனை இத்தனை அருகில் விட்டதில்லையா? என யோசித்தாள். அவன் தோள் மீது அமிலம் கொட்டிய நாள் ஞாபகம் வந்தது. அன்று அவன் ஸ்பரிசம் தீண்டிய படியே தான் இருந்தது. ஆனால் அன்று இவ்வாசனை அவனிடம் இல்லையே என சிந்தித்தாள்.

காதல் கண்கட்டுதே (Completed)Onde histórias criam vida. Descubra agora