"ஹ்ஹாஆஆ" என்று வெளியே கேட்காத ஒரு அலறலை ஏற்படுத்திவிட்டு உடல் எங்கும் வேர்க்க விறுவிறுக்க தொப்பலாக நனைந்து எழுந்து அமர்ந்தான் ஆத்ரேயன். சில வினாடிகள் எடுத்துக்கொண்டு நிதானத்துக்கு வந்தவன் தன் கைகளால் முகத்தை அழுத்தமாகத் துடைத்துக்கொண்டான். துடைத்த போதும் அவன் கண்ட கனவின் தாக்கம் அவனுக்குள் இருந்துக்கொண்டே இருந்தது. மனதில் இருப்பதுதானே கனவாக வரும். அதுதான் இவனுக்குத் தினம் தினம் நேரம் தவறாமல் வந்துக்கொண்டு இருந்தது.
ஆளை அரையடிக்கு உள்ளே இழுக்கும் பெட்டில் இனியும் அவனுக்குத் தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. புட்லம்ப் வெளிச்சத்தில் இருந்த அறையைச் சுற்றி பார்வையைவிட்டான். அந்த வெளிச்சத்தை கண்கள் எடுத்துக்கொள்ளச் சற்று நேரம் கொடுத்து லைட்டை போடாமலேயே எழுந்து ஜன்னல் ஓரம் போய் நின்று வெளியே பார்த்தான்.
இருள் பூசிய வானம் இவன் இருக்கும் நிலையைப் போல அவனுக்குத் தோன்றியது. இன்று அம்மாவாசை. நிலவைப் பார்க்க முடியாது. இன்னும் பதினைந்து நாள் காத்திருந்தால் முழு நிலவைப் பார்க்கலாம். ஆனால் இவன் ஒரு முடிவை எடுக்கத் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு நிலவுக்கு வானம் பார்க்கும் சந்தர்ப்பமே வராமல் போகலாம்.
கண்ட கனவின் மிச்சம், நிஜத்தில் இவன் மனதை அறுத்துக்கொண்டு இருக்கும் கோர விபத்தின் மிச்சம், இவனுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஒரு பொறுப்பின் மிச்சம் என்று இவனுக்குள் ஏக குழப்பம். அதைச் சமன்படுத்த முடியாமல் திணறியவன் திரும்பி வந்து போனை எடுத்தான்.
போனில் வேண்டியது, வேண்டாதது என்று பார்த்துக்கொண்டே இருந்தான். இன்னும் சற்று நேரத்தில் கதிரவன் வந்துவிடுவான் என்று சுவற்றில் ஓடிக் கொண்டு இருந்த கடிகாரம் கூறியது. அதையே இவனின் போனும் சொல்ல அதை வைத்துவிட்டு அந்த விஸ்தாரமான அறையில் நவீன மாடலில் இருந்த தேக்கு கட்டிலையும், அதில் போடப்பட்டிருந்த பஞ்சு மெத்தையையும் விட்டுவிட்டு தரையில் படுத்தான் அவன்.