ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்லுவார்கள். இளமதி எப்போதுமே ஆடை அணிகலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது. அப்படியிருந்தும் ஒரு சாந்தமான அழகு அவளிடம் இருக்கும். இன்றோ அது பலமடக்கு அதிமாக தெரிந்தது இவனுக்கு. காதல் என்று ஒன்று வந்துவிட்டால் எல்லாம் அழகாகத்தான் தெரியும். அந்த கண்ணோட்டத்தில் ஆத்ரேயனுக்கு அழகாக தெரிந்திருக்கலாம். ஆனால் அங்கே இருந்த இன்னொருவனுக்கும் அவள் அழகாக தெரிந்ததுதான் பிரச்சனையாகி போனது. ஒரு புடவை விளம்பரத்துக்கு ஒருத்தர் இந்த துறையை சாராத, அனுபவம் இல்லாத ஒரு பெண்ணை அழைத்து வந்திருக்கிறார் என்றால் அந்த பெண்ணிடம் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதற்காக பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது பார்த்துக்கொண்டு இருந்தான் இளமதியுடன் நடித்த அந்த நடிகன்.
பொதுவாகவே ஆத்ரேயன் அதிக நெருக்கம் கொண்ட சீனை வைக்கவேமாட்டான் எந்த விளம்பரத்திலும். அதிலும் பாரம்பரியத்தை விளக்கும் பட்டு விளம்பரத்தில் அந்த பேச்சுக்கே இடமில்லை. பட்டுடுத்தி வரும் பெண்ணை ரசித்து பாராட்டும் கதாபாத்திரம் மட்டும்தான் அந்த நாயகனுக்கு. ஆனால் அவனோ பாராட்டுதலுடன் மட்டும் நின்றுவிடாமல் அந்த பெண்ணை அணைக்கும் சீனையும் வைக்கும்படி கடை முதலாளியிடம் ஒரே நச்சரிப்பு. அவருக்கு என்ன வந்தது அவன் யாரை அணைத்தால்? அதனால் அவரும் அதற்கு சம்மதம் சொல்லிவிட, டைரெக்ட் பண்ணுபவனின் மனநிலை தெரியாமல் திரும்பி நின்ற இளமதி அருகில் சென்றான் அவன்.
"குமார் அவன் என்ன செய்யுறான்? இங்கேதானே அவன் நிற்கனும். எதுக்கு அவ பக்கத்தில் போறான்?" என்றான் ஆத்ரேயன்.
"கேட்கிறேன் சார்" என்று ஓடிய குமார் கேட்டுவிட்டு அதே வேகத்துடன் திரும்பி வந்தான். எப்போதுமே சுடிதாரில் மூடி வைக்கப்பட்டிருந்த இளமதியின் பின் முதுகு இன்று அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டில் சற்று ஆழமாகவே வெளியே தெரிய அதையே வாயில் ஜொள்ளு வெளியே தெரியாமல் வடிய பார்த்துக்கொண்டு மெல்ல தன் கையை கொண்டு சென்றான் அந்த லொள்ளு பார்ட்டி.