தாயை பிரிய எந்த சேய்க்குத்தான் விருப்பம் இருக்கும். ஆனால் நாம் விரும்பியது எல்லாமே வாழ்க்கையில் நடந்துவிடாதே! விருப்பம் இல்லாமல் பிரிந்தாள் இளமதி ஆத்ரேயனிடம் இருந்து.
"நான் போயிட்டு வரேன்" என்றாள் அவனிடம்.
"எங்கே போறிங்க?" என்றான் இவன் சிரிப்புடன்.
"கீழே போறேன்." என்றாள் அவள்.
"யாருட்ட சொல்லிட்டு போற. பேரும் இல்லை ஊரும் இல்லை. போயிட்டு வரேன், கீழே போறேன்னு சொல்லிட்டு இருக்க." என்றான் அவன் அவள் மனதை படிக்க.
"போயிட்டு வரேன் அத்தான்." என்றாள்.
"அத்தானா! சரி அம்மணி போயிட்டு வாங்க. உங்க அத்தான் அழைப்பைத்தான் என்னால தாங்கிக்க முடியல. அத்தான் அத்தான்னு அத்துட்டு போறதிலேயே குறியா இருக்கிங்க. போங்க போங்க." என்றான் இவன் கேலியாக.
"போங்கத்தான். இப்படி கூப்பிட்டாலாவது என் அக்காவை நீங்க நியாபகம் வச்சிப்பங்கன்னு பார்க்கிறேன்." என்று கூறிவிட்டு அவள் சென்றுவிட இவன் யோசனையில் ஆழ்ந்தான். இவனுக்கு இவளை கைப்பிடித்தே ஆக வேண்டும் என்ற ஆவல் கூடியது. எதற்காக என்று அவனுக்கு தெரியவில்லை. எதற்காகவும், யாருக்காகவும் இவனின் காதலை விட்டுக்கொடுக்கவே கூடாது, அவளையும் விட்டுக்கொடுக்க கூடாது என்ற எண்ணத்தில் அவன் அதற்கான வழியை தேடினான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றவே மொக்ஷிக்காவை தேடி சென்றான் அவள் போகும் முன்.
"மொக்ஷி உன் நெருங்கிய சொந்தங்கள் வீட்டு விருந்தை முடிச்சிட்டு ஒரு நாள் ப்ரோக்ராம் எங்க வீட்டுக்கு வரமாதிரி போடு. ரொம்ப நாள் இழுக்காதே, ஒரு வாரத்திற்குள் போடு. வரும் போது மூணு பேரா வாங்க." என்றான் ஆத்ரேயன்.
"ஹலோ ப்ரோ என்ன சொல்றிங்க? இன்னைக்குத்தான் கல்யாணமே ஆகியிருக்கு. அதுக்குள்ள மூணு பேரா வர சொல்றிங்க. அது எப்படி சாத்தியம் ? இன்னும் இரண்டு வருஷத்துக்கு குழந்தை வேண்டாமுன்னு முடிவு பண்ணிருக்கிறோம் நாங்க. நீங்க சொல்றதை பார்த்தா இவ நிறைமாதமா இருக்கணும் இப்போ. அப்போதான் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள மூணு பேரா வர முடியும். அதுக்கு கூட வாய்ப்பு இல்லை." என்றான் அஸ்வத் பதறிக்கொண்டு.