இன்று ஒருநாள்தான் கால்ஷீட். அதைவிட்டுவிட்டால் இந்த நடிகையை பிடிப்பது அடுத்த மாதம்தான். ஏதோ விழா என்று வெளிநாடு பறந்துவிடுவாள் இவன் பல நாட்களாக அலைந்து திரிந்து தேடி பிடித்த நடிகை. அதற்காகவே அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களையும் பிடித்து வைத்து இந்த நடு ராத்தியிரியில் ஒரு மனுஷன் ஷூட்டிங் நடத்திக்கொண்டு இருக்கிறான். மொக்ஷிக்கா தவறவிட்ட பூச்சாடி விழுந்துவிட்டால் இன்று ஷூட்டிங் கேன்சல்தான். இப்படியும் நடக்கலாம் என்று ஒன்னொரு பீஸ் வாங்கி வைக்க முயன்றால் வேறு கிடைக்கவில்லை. இப்படி இவன் ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுன்னு வாங்கி வச்சிருந்த பொருளை கீழே போட்டுவிட்டு ஓடும் அளவுக்கு அங்கே என்ன நடந்துவிட்டது. ஒரு வேலையற்ற மகராசி தூங்கி சரிந்துக்கொண்டு இருக்கிறாள் வேலை நடக்கும் இடத்தில். வேலை நடக்கும் இடத்தில் தூங்குவதே தவறு, இதில் இந்த மாதிரி சீன் வேற! என்ன நான்கு மாடி கட்டிடத்தில் இருந்தா விழ போகிறாள், மூன்றடி இருக்கும் சேரில் இருந்து விழ போகிறாள். அதிகபட்சமாக முழங்கையில் அடிபடலாம் துடைத்துவிட்டு போகும் அளவுக்கு. அதுக்கு இந்த அக்கப்போர்!
தன் நிலையையும், அந்த சூழ்நிலையையும் மனதிற்குள் கொண்டு நிறுத்திய அந்த புகைப்பட கலைஞனுக்கோ தூங்கு மூஞ்சி பெண் மேல் கோபம் பாய அவளை நோக்கி போனான். தூக்கத்தில் சரிந்து விழ போனவளை ஓடி போய் பிடித்து அவள் தலையை சரியாக வைத்துக்கொண்டு இருந்தாள் மொக்ஷிக்கா.
"மொக்ஷி இது உனக்கே நல்லாயிருக்கா? இருக்கும் சூழ்நிலை தெரிந்துதான் நடந்துக்கிறியா? உன் கையில் இருந்த பொருள் விழுந்து உடைந்திருந்தால் இன்னைக்கு எல்லாமே நாசம். கிட்டத்தட்ட பாதி ஷூட் முடிச்ச பிறகு இப்படி நடந்தா எனக்கு டென்ஷன் எப்படி ஏறும்? இப்போ எதுக்காக இவளை இங்கே கூட்டிட்டு வந்த?" என்று கத்தினான் ஆத்ரேயன்.
"ஆதி எதுக்காக இப்படி கத்துற? அவ பயந்துற போறா." என்றாள் மொக்ஷிக்கா பதறியப்படி. அதற்குள் இவன் கத்திய கத்தலில் தூங்கும் பேதை சின்னதாக அசைவை வெளிப்படுத்தினாள். இருக்கும் நிலையை எடுத்து கூறிய பிறகும் மொக்ஷிக்காவின் பதில் இப்படி வர ஆத்ரேயனுக்கு கோபம் அதிகமானது. இவள் மேல் இத்தனை பாசமா? வேலையை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு? எனக்கு இல்லாத பாசம் இவளுக்கு எப்படி வரலாம்? என்று புத்தி கோணல் மாணலாக யோசிக்க சுற்றும் முற்றும் பார்த்தவன் பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்து தூங்கிக்கொண்டு இருப்பவள் முகத்திற்கு நேரே ஊற்றிவிட்டான்.