இருளை போக்கும் ஒளியாக வானில் நிலவு பெண் உலா போய்க்கொண்டு இருந்தாள். வாடைக்காற்று உடம்பை தீண்டி குளிர வைத்துக்கொண்டு இருந்தது. கல்யாண வீடு என்று காட்ட போடப்பட்டிருந்த சீரியல் லைட் பளிச்சிட்டுக்கொண்டு இருந்தது. இத்தனையும் தாண்டி புதுமண தம்பதியர்கள் இருந்த அரை புட் லம்ப் வெளிச்சத்தில் ஒரு ரம்பியமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது. கட்டிலில் பூ அலங்காரம், கூடை கூடையாக பழங்கள், இனிப்பு எல்லாம் இல்லை. குடிக்க தண்ணீரும், பாலும் இருந்தது அவ்வளவுதான்.
அறை முழுவதும் ஏசியின் குளுமை இருந்தும் ஏனோ ஒரு இறுக்கத்தை உணர்ந்தான் ஆத்ரேயன். போனில் என்னன்னவோ பார்த்தும் இறுக்கம் குறைய மறுத்தது. இறுதியாக ஒரு இ புக்கை திறந்து படிக்க தொடங்கினான்.
இவனுக்கு மட்டும்தான் இறுக்கம். இவனை என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தவள் களைப்பில் தூங்கி போனாள். இவன் பாதி புக்கை முடிந்திருந்த வேளையில் அவள் இருமிக்கொண்டு திரும்பி படுத்தாள். தொடர்ந்து இருமிக்கொண்டு இருக்கவும்
"இளா எழுந்து தண்ணீ குடிச்சிட்டு படு" என்றான் அவன்.
"ம்" என்று எழுந்தவள் கையில் பாலை எடுத்து கொடுத்தான். அதை வாயில் வைத்தவள்
"தண்ணீ இல்ல இது" என்றாள்.
"உனக்கு வச்ச பால்தான், குடி" என்றான் அவன்.
"எனக்கு வேண்டாம்." என்று கொஞ்சம் குடித்துவிட்டுவிட்டு அவனிடமே கொடுத்தவள் இந்த முறை அவள் இடத்தில் படுக்காமல் அவன் மார்பில் போய் சாய்ந்தாள். ஒரு கையில் போனும், ஒரு கையில் பாலுமாக இருந்தவன் அவள் வந்து மார்பில் சாயவும் பார்வையை கண்களை விரித்தான். இவன் இவளை விரும்பித்தான் திருமணம் செய்துக்கொண்டான். ஆனால் அவள் அப்படியில்லை என்று இவன் அறிவான். இவனை பிடித்திருக்கலாம், ஆனால் திருமணம் செய்துக்கொள்ள தேவையான காதல் இவளிடம் இல்லை.
பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணத்திலும் முதலில் காதல் இருப்பதில்லை. உடல் சேர்ந்த பிறகுதான் அங்கே உள்ளம் சேரும். இதையும் அப்படி நினைத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று அவன் நினைத்தான். ஆனால் இவனை ஒரு பாதுகாப்பு வளையமாக மட்டுமே நினைக்கும் பெண்ணிடம் எதை ஆரம்பிக்க. அதனால்தான் இவன் அமைதியாக இருந்தது. ஆனால் இப்போது அவளாகவே வந்து இவனை நெருங்கவும் இவனால் சும்மா இருக்க முடியவில்லை. பாலை வீணாக்காமல் குடித்தவன், கையில் இருந்த போனையும் அதன் இடத்தில் வைத்தான்.