'நீ சொன்னதாலையோ, இல்லை என் குடும்பம் என்ன சொல்லும் என்றோ நான் விலகவில்லை என் காதலைவிட்டு. என் காதல் பெண்ணுக்காக விலகி நிற்கிறேன்.' என்று மறைமுகமாக கூறிய நண்பனை எதிரே இருந்து பார்த்துக்கொண்டே இருந்தாள் மொக்ஷிக்கா. அவன் சிரத்தையாக காப்பியை குடித்துக்கொண்டு இருந்தான். அவன் காப்பியை குடிக்கும் வரை அமைதியாக நின்றிருந்த இளமதி அவன் கையில் இருந்த காப்பி கப்பை வாங்கி பிறகு
"ஆதி சார் எனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைங்க." என்றாள் ரொம்பவே சாதாரணமாக.
"வாட்" என்று மொக்ஷிக்கா அதிர்ச்சி ஆக, அந்த அளவுக்கு எல்லாம் அதிர்ச்சியாகமல்
"எதுக்கு இவ்வளவு அவசரமா கல்யாணம். இன்னும் இருபது கூட முடியலையே!" என்றான் ஆத்ரேயன்.
"அது முடிஞ்சா என்ன? முடியாட்டி என்ன? இந்த வயசுல எல்லாம் எங்க ஊருல பிள்ளையை பெத்து வச்சிருக்காங்க." என்று இளமதி கூறினாள்.
"இப்போ பிள்ளைக்கு என்ன அவசரம்?" என்றான் ஆத்ரேயன் அடுத்த கேள்வியாக. ஆத்ரேயன் எப்படி கோபப்படாமல் இவ்வளவு கூலாக இருந்து கேள்விக்கேட்டுக்கொண்டு இருக்கிறான் என்று நினைத்தாள் மொக்ஷிக்கா ஒன்றும் புரியாமல்.
"பிள்ளைக்கு எல்லாம் அவசரம் இல்லை. இந்த தொல்லை பிடிச்ச அக்காட்ட இருந்து விடுதலைக்காகத்தான் அவசரம். நீங்க பேசாம என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருந்தா என்ன? உங்க கூட வேண்டாம். உங்க அப்பா, அம்மா ஊருலதானே இருக்காங்க. அங்கே ஒரு வேலைக்காரி வேலையை வாங்கித்தந்து அவங்கட்ட விட்டுட்டு வந்திருக்கலாமில்ல. நாம் அப்படியே தோட்டம், துறவுன்னு சுத்திட்டு இருந்திருப்பேன். இந்த படிச்ச அக்காட்ட கொண்டு விட்டுட்டு, அது எப்போ பார்த்தாலும் என்னை தொன தொனன்னு திட்டிட்டே இருக்கு. படிக்கனுமாம், காலேஜ் போகணுமாம், ஆடனுமாம், பாடனுமாம்." என்று இளமதி பட்டாசாய் பொறிந்தாள்.
'இவ்வளவுதானா! அவ புத்தி தெரிஞ்சுதான் அவன் அமைதியா இருந்திருக்கிறான்' என்று நினைத்துக்கொண்டாள் மொக்ஷிக்கா.