ஆத்ரேயன் வீட்டில்.....
"என்ன ஆதி பொண்ணை பிடிச்சிருக்கா?" என்று அவனின் மூத்த சகோதரி கேட்டாள். என்ன பதில் சொல்வது என்று இவன் அமைதியாக இருந்தான்.
தகப்பனுக்கு உடல் நலம் சரியில்லை என்ற செய்தி வர பதட்டத்துடன் இவன் கிளம்ப இவனுக்கு இன்னொரு இடத்தில் இருந்து இரகசிய தகவல் வந்தது அவனுக்கு கிடைத்த செய்தி பொய் என்று.
ஆத்ரேயனின் காதல் இருவருக்கு மட்டுமே தெரியும். ஒன்று மொக்ஷிக்கா இன்னொன்று அவனின் இரண்டாவது சகோதரி கணவன் கபிலனுக்கு. அவரிடம் மட்டும்தான் இவன் கூறியிருந்தான். அவர்தான் அவனுக்கு தகவல் கொடுத்தது யாரும் ஒன்றுமில்லை இங்கே என்று. பெண் பார்த்து வைத்திருப்பதாகவும், வந்தால் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள், அதனால் வர வேண்டாம் என்று கூறியிருந்தார். இதை கேட்ட ஆத்ரேயனுக்கு குடும்பத்தார் மீது கோபம் வந்தது. எந்த காலத்தில் இருக்கிறார்கள் என்று நினைத்தவன் என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று கிளம்பி சென்றான்.
எப்போது இளமதியை முத்தமிட்டானோ அதற்கு பிறகு அவனுக்கு இரண்டாவது எண்ணம் என்று எதுவும் இல்லை. ஏற்கனவே அவள் இல்லையென்றால் எதுவும் இல்லை என்று நினைத்திருந்தவன். இப்போது அதில் நூறு சதவீதம் உறுதியாகி போனான். இப்போது இந்த மாதிரியான திட்டங்கள் எல்லாம் எழ அவனுக்கு கோபம் வந்தது. அதே கோபத்துடன் கிளம்பி சென்றான்.
"ஆதி உன்னைத்தான் கேட்கிறேன்" என்று அவனின் சகோதரி அழுத்தமாக கூற
"எந்த பொண்ணு?" என்றான் இவன் நிதானமாக. இவனின் பதிலுக்காக அதுவும் தங்களுக்கு சாதகமான பதிலுக்காக காத்திருந்தவர்கள் அதிர்ச்சியாகி போனார்கள்.
'மாப்பிளை ஆரம்பிச்சிட்டான்" என்று நினைத்தார் கபிலன்.
"இது என்னடா கேள்வி? ஒரு பொண்ணைத்தானே பார்த்துட்டு வந்தோம்." என்றாள் இவனின் சகோதரி மூத்த ஆதிலெட்சுமி
"நான் யாரையும் பார்க்கல." என்றான் இவன் விட்டேறியாக.
"என்ன பார்க்கலையா? உன் முன்னாடிதானே அந்த பொண்ணு அரைமணி நேரம் இருந்துச்சு." என்றாள் ஆரவள்ளி (இரண்டாவது சககோதரி.)