"எப்பேர்பட்ட வார்டன்ஸ் இருக்குற ஹாஸ்டல் இது. ஆளுக்கோரு பக்கம் கழுகு மாதிரி பார்த்துட்டு இருக்காங்க கொத்தி கொதற. இதுக்கு மத்தியில் இவன் இப்படி சேட்டை செய்துட்டு போறானே! என்னை கேவலப்படுத்தாம விடமாட்டான் போலையே! அதுக கையில் சிக்கினால் சின்னா பின்னாமாக்கி விடுவாங்களே!" என்று இவள் மனதிற்குள் நினைத்துக்கொண்டு இளமதி கணவன் கொடுத்த முத்தத்தில் விக்கித்து போய் இருந்தாள். அதற்குள் வைஷ்ணவி தண்ணீருடன் வந்தாள்.
"என்னாச்சு அத்தே, எதுக்கு இப்படி பேயரைஞ்சது மாதிரி இருக்க." என்று கேட்டாள். கேட்டுவிட்டு நினைவு வந்தவளாக
"அத்தே ஒரு புது பேய் படம் வந்திருக்கு. மாமா வந்ததும் அதை டவுன்லோட் பண்ணிட்டு நைட் பார்க்கலாமா?" என்று அவள் கேட்க இளமதியின் கை தானாக தன் தாடையை தடவியது.
'நான் படம் பார்க்க நைட் வந்துட்டா அவன் பேயா அவதாரம் எடுத்திடுவான். அப்புறம் லைவ் பேய் ஷோ பார்க்கவேண்டியத்தான்.' என்று மனதிற்குள் நினைத்தவள்
"இல்ல வேண்டாம், எனக்கு பேய் படம் பிடிக்காது." என்றாள் இளமதி.
"அப்படியா" என்று ஏமாற்றத்துடன் வைஷ்ணவி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ஐஸ் பெட்டியை காலி செய்து கையில் அள்ளிக்கொண்டு வந்தார்கள் சிறுவர்கள்.
"எனக்கு" என்று வைஷ்ணவி அங்கே சென்றுவிட அவர்கள் பின்னே வந்துக்கொண்டு இருந்த ஆத்ரேயன் கையில் இரண்டு ஐஸ் இருந்தது. ஒன்றை சாப்பிட்டுக்கொண்டே வந்தான், மற்றொன்றை கையில் வைத்துக்கொண்டு வந்தான். சின்னவர்கள் கொண்டு வந்த ஐஸ் அவர்களுக்கே பத்தாமல் பிரிக்க சண்டைப்போட்டுக்கொண்டிருக்க இவளுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
ஆத்ரேயன் கொண்டு வந்த ஐஸில் ஒன்றை இவளிடம் நீட்டினான். அவள் அதை வாங்காமல் அவன் வாயில் இருந்ததை பார்த்தாள். அவள் மேல் இருந்த கோபம் அந்த ஐஸ் போல உருகி போன இடம் தெரியாமல் போனது ஆத்ரேயனுக்கு. அவள் கேட்டதை அவளிடம் கொடுத்துவிட்டு போனான். சின்ன சின்ன சில்மிஷம் பெரிய பெரிய சந்தோஷத்தை கொண்டு வரும். இதெல்லாம் சின்னபிள்ளை தனமாக இருக்கிறது என்று பெரிய மனுஷங்களா நடந்துக்கொண்டால் கொஞ்ச தூரம் பயணித்த பிறகு திரும்பி பார்த்தால் மனித கால்தடம் அங்கே இருக்காது, இயந்திரத்தின் கால்தடத்தைத்தான் நாம் பதித்துவிட்டு வந்திருப்போம்.