கல்யாணம், விருந்து எல்லாம் முடிந்து ஒரு வழியாக சகஜ வாழ்க்கைக்கு மொக்ஷிக்காவும், அஸ்வத்தும் திரும்ப, இளமதி ஹாஸ்டலில் தங்கவைக்கப்பட்டாள். வாரத்துக்கு ஒரு முறை ஆத்ரேயன் பார்த்து பேசிவிட்டு வருவான். ஏதாவது தேவையா? ஒன்னும் பிரச்சனை இல்லையே? எல்லாம் செட் ஆயிட்டா? படிப்பு நல்லா போகுதா? இதெல்லாம்தான் அவன் கேள்வி. அதற்கு அவள் பதில் சொல்லுவாள் அவ்வளவுதான்.
ஒரு இரண்டு மாதம் இப்படியே போய்க்கொண்டு இருந்தது. மனதில் இருக்கும் காதலை இவன் உள்ளேயே போட்டு புதைத்துக்கொண்டான். காதல் என்பது காதலிக்கும் தன் இணைக்கு மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும். அது இவன் இணைக்கு இவனால் கொடுக்க முடியாது என்று பிரக்டிக்கலா யோசிக்க தொடங்கினான் ஆத்ரேயன். ஏற்கனவே இளமதி இவன் மேல் ஒருவித உரிமை வேட்கையில் இருப்பவள். அவளை கொண்டு இவன் வீட்டில் விட்டால் தினம் தினம் கண்ணீருக்கு பஞ்சம் இருக்காது. பாசமிக்க மனிதர்கள்தான் இவன் வீட்டார், ஆனால் அது மகனுக்கு மட்டும்தான் என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது. எப்படியும் கலாட்டா குடும்பமாகத்தான் இருக்கும் இவனின் திருமண வாழ்க்கை என்பதும் அவனுக்கு புரிந்தது. அது இவன் பார்க்கும் பெண்ணாக இருந்தாலும் சரிதான், அவர்கள் பார்த்து திருமணம் முடித்துவைக்கும் பெண்ணாக இருந்தாலும் சரிதான். வேண்டுமென்றால் கொஞ்சம் போர்ஸ் கம்மியாக இருக்கும் அவர்கள் பார்த்து வைக்கும் பெண்ணுக்கு அவ்வளவுதான்.
அது வேறு எந்த பெண்ணுக்கு நடந்தாலும் அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். ஆனால் இவளுக்கு நடந்தால் இவனால் தாங்கிக்கொள்ள முடியாது என்று நினைத்து அவளை தள்ளிவைத்தான் மனதில் இருந்தும், அருகில் இருந்தும். இவனை அவள் புரிந்துக்கொண்டாளோ? இல்லை செய்து கொடுத்த சத்தியத்தை மீறி ஒரு பெண்ணை பார்த்தான் என்ற கோபத்தில் இருந்தாளோ? இவனை போல அவளும் பெயருக்கு பேசிக்கொண்டு இருந்தாள். இரண்டு பேருமே தெரிந்தவர்கள் என்ற ரீதியில் மட்டுமே நடந்துக்கொண்டார்கள். ஆத்ரேயனுக்கு வீட்டில் ப்ரெஸ்ஸர் அதிகமானது திருமணம் செய்துக்கொள்ளும்படி.