இளமதியை காணாமல் நடு இரவாகிய நேரத்தில் ஆத்ரேயன் மொக்ஷிக்காவின் உதவியை நாடி நிற்க "அக்கா....அக்கா...அக்கா" என்று இளமதி அலறுவது மொக்ஷிக்கா காதில் கேட்டது.
"ஆதி ஒரு நிமிஷம் லைனிலேயே இரு." என்று மொக்ஷிக்கா கதவை திறக்க ஓடினாள்.
"இரு நான் பாக்குறேன்." என்று மனைவியை தடுத்த அஸ்வத் லென்ஸ் வழியாக வெளியே பார்த்துவிட்டு பதறியப்படி கதவை திறந்தான்.
"என்னம்மா? என்ன? ஏன் இப்படி இருக்க?" என்று கேட்டுக்கொண்டே அஸ்வத் நடுங்கி போய் அலங்கோலமாக நின்றிருந்த இளமதியை உள்ளே அழைத்துவந்தான்.
"என்னாச்சு மொக்ஷி?" என்றான் ஆத்ரேயன் இங்கே இருந்து பதற்றத்துடன்.
"ஒன்னுமில்லை ஆதி. நீ அமைதியா இரு." என்று மொக்ஷிக்கா போனில் பேசிக்கொண்டே இளமதியை கட்டிக்கொண்டாள்.
"அக்கா....அக்கா...அக்கா..." என்று இவள் அழ அங்கே ஆத்ரேயனுக்கு தெளிவாக கேட்டது.
"மொக்ஷி அவட்ட போனை கொடு." என்றான். மொக்ஷி போனை கட் செய்துவிட்டு இளமதிக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். அதை கையில் வாங்க கூட முடியாமல் இளமதியின் கை ஆடியது. அவள் வாயில் தண்ணீரை கொடுக்கும் முன் ஆத்ரேயன் மீண்டும் போன் செய்தான்.
"இவனும் இருக்கமாட்டான்." என்ற மொக்ஷிக்கா போனை ஆன் செய்து இளமதியிடம் நீட்டினாள். இளமதி அவளை பார்க்க
"உன் அத்தான். உன்னை காணாம துடிச்சிட்டு இருக்கான். அவன்ட்ட கொஞ்சம் பேசு. பாவம் அவன்." என்றாள் மொக்ஷிக்கா இவள் பேசுவாளோ மாட்டாளோ என்று நினைத்து. ஆனால் இளமதி போனை அவள் கையில் இருந்து பிடுங்குவது போல பிடுங்கினாள்.
"அத்தான் அவன் என்னை அடிச்சிட்டான். இங்கே அடிச்சிட்டான். பாரு அத்தான்." என்று இளமதி கன்னத்தை காட்டிக்கொண்டே அழுதாள்.
"யாருடி அடிச்சா உன்னை. சென்னையில் இருந்தவ இங்கே எப்படி வந்த? ஏன் இப்படி இருக்க? முதலில் அழுகையை நிறுத்திட்டு தண்ணீயை குடி." என்றான் அவன் அவள் பழுத்த கன்னத்தை பார்த்து அதிர்ந்து போய்.