பனைமரத்தடியில் இருந்து பாலை குடித்தாலும் அது பார்ப்பவர்களுக்கு கள்ளாகத்தான் தெரியும் என்பார்கள். அது போல ஆனது இளமதியின் நிலை. அவன் கணவனை பிரிந்து இருக்கிறாள் என்று எல்லோருக்குமே தெரியும். இவன் அவளை பார்க்க சென்று வந்தது அவனுக்கு மட்டும் தெரியும். இப்படியிருக்க கணவனை பிரிந்திருப்பவள் இரண்டு மாத கருவை தாங்கிக்கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்தால் கேள்வி கேட்காமல் அதனை ஏற்றுக்கொள்ள அத்தனை பரந்த மனம் ஜனங்களுக்கு இல்லையே! அதுவும் நேற்று மனைவியாக வந்தவள் பிறந்தது முதல் தூக்கி வளர்ந்த உடன்பிறப்பை மறந்துவிட்டான் என்று கலகம் செய்துக்கொண்டு இருக்கும் நாத்திமார்கள் இருக்கையில்.
மனைவியை கையோடு அழைத்துக்கொண்டு வந்துவிட்டான் ஆத்ரேயன். காரில்தான் அழைத்து வந்தான். வரும் வழியெல்லாம் அவள்பட்ட பாட்டை பார்த்துவிட்டு 'இந்த குழந்தை அவசியம்தானா?' என்று நினைத்தான். சும்மாவே கட்டிலில் தன்னை தாங்கிய பெண்ணை தரையில்விடாமல் வைப்பதுதான் ஒரு நல்ல ஆணுக்கு அழகு என்று நினைப்பவன். அப்படித்தான் வைத்திருந்தான் அவளை. என் தேவை தீர்ந்துவிட்டது, அதன் பிறகு நீ எப்படி போனால் என்ன என்று நினைக்கிறவன் இல்லை. ஆனால் இடையில் இவர்கள் இப்படி பிரிவார்கள் என்று அவனே நினைக்கவில்லையே!
அப்படி பொத்தி பொத்தி பார்த்த மனைவி சாப்பிடுகிற எந்த ஐட்டத்தை கண்ணால் பார்த்தாலே குடல் வெளியே வந்து விழுவது போல வாந்தி செய்வதை அவனால் பார்க்கவே முடியவில்லை. வாந்தி போதாது என்று இருக்க முடியாமல் சுருண்டு சுருண்டு படுத்துக்கொள்ளும் மனைவியை கஷ்டப்பட்டு சென்னைக்கு கொண்டு சேர்த்துவிட்டான். அதன் பிறகு அவளிடம் நிறையவே பேசினான் குழந்தையைப்பற்றி.
"இருக்கட்டும் ரேயா. இனி உன்னை பார்க்க கூட முடியாதோன்னு நான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் இந்த குழந்தைதான் உன்னை என் கூட மறுபடியும் சேர்த்து வச்சது. இதுக்காகவே நான் எந்த கஷ்டத்தையும் தாங்கிப்பேன். யாருகண்டா என் அக்கா கூட என் குழந்தையா பிறக்கலாம். அவ என்னைவிட்டுட்டு இருந்துக்கவேமாட்டா." என்று அவள் கூறிவிட அதன் பிறகு அவனிடம் மாற்று கருத்து எதுவுமே இல்லை. கயல்மதிதான் மறுபிறப்பாக வந்து தன் மனைவி வயிற்றில் பிறப்பாள் என்றால் அதை விட ஒரு பெரும் பாக்கியம் இவனுக்கு இல்லை. போன பிறவியில்தான் அவளை தன்னால் காக்க முடியாமல் போனது. அந்த குற்ற உணர்வு அவன் மனதில் என்றைக்குமே இருக்கும்.