சும்மா இருக்க முடியாமல் கோபத்தில் தவறாக பேசிவிட்டு கணவனை எப்படி சமாதானப்படுத்த போறோம் என்று கவலையில் மேலே இருந்து கீழே வந்தாள் இளமதி. வந்தவள் "உன் மாமா எங்கே?" என்று தேடினாள்.
"தோட்டத்துக்கு போயிருப்பாருன்னு நினைக்கிறேன், வா டெயிலர் வந்துட்டாரு" என்று இவளை இழுத்துக்கொண்டு போய்விட்டாள் வைஷ்ணவி. என்ன வேலை யில் இருந்தாலும் இளமதிக்கு அவனையே தேடியது. அவனோ காலையில் போனவன் மதியமும் வீட்டுக்கு வரவில்லை, மாலையும் இவள் கண்ணில் படவில்லை. மனைவி பக்கத்தில் இருக்காவிட்டாலும் அவளை சுற்றியே இருப்பவன் இன்று இல்லாமல் போகவே இவள் முகம் விழுந்துவிட்டது, மற்றவர்களுக்கு உற்சாகம் பீறிட்டது.
சாப்பாடு வேண்டாம் என்று போய் படுத்துக்கொண்டாள். கபிலன் புல்லெட்டில் வந்து இறங்கினான் ஆத்ரேயன்.
"ஒரேடியா முஞ்சை காட்டாதேடே பொண்டாட்டிட. அப்புறம் அவ திருப்பி காட்ட ஆரம்பிச்சா தாங்கிக்கமாட்ட." என்று கூறிவிட்டு போனார் அவர். உள்ளே வந்தவனிடம் தாயார் சாப்பிட சொல்ல
"வேண்டாம், வெளியே சாப்புட்டுட்டேன்." என்று கூறிவிட்டு போகும் மகனை கவலையுடன் பார்த்தார் கற்பகம்.
"பொண்டாட்டி சாப்புட்டாளான்னு கூட கேட்கலையே! உம்ம மவனுக்கு வச்சா குடுமி, அடிச்சா மொட்டை" என்று கூறிவிட்டு போனார் கற்பகம் கணவரிடம். 'அப்பன் புத்தி' என்று முனங்கிக்கொண்டே போவது அவர் காதில் தெளிவாகவே கேட்டது. அவர் சிரித்துக்கொண்டார். 'நான் அப்படி இருப்பதால்தான் இன்னும் இவ என் காலை சுற்றி வரா, இந்த வயசிலும் என் பார்வைக்கே பயப்படுறா.' என்று வேறு பெருமைப்பட்டுக்கொண்டார்.
ஆத்ரேயன் மனைவி சாப்பிட்டாளா என்று கேட்காமல் போனதற்கு காரணம் அவனுக்கே விடை தெரியுமே! இன்னைக்கு அவள் செய்ய போகும் கலாட்டாவும் தெரியும். எல்லாத்துக்கும் தயாராகத்தான் வந்தான். நீ எப்படி போனா என்னன்னு காட்ட அண்ணாச்சிக்கடை புரோட்டாவை சால்னாவில் ஊற வைத்து உள்ளே தள்ளிட்டு வந்திருந்தான். அவன் புரோட்டாவை அதிகமாக விரும்பி சாப்பிடவே மாட்டான். இன்னைக்கு சால்னாவில் புரோட்டா மிதந்தது. கையில் சால்னா வாடை தெரிய வேண்டாமா அதனால். அவன் சாப்பிடும் போது கபிலன் தலையில் கையைவைத்துக்கொண்டு இருந்தார்.