"எங்கோ தொலைத்தேன் என் இதயத்தை!
போன இடம் தெரியவில்லை, அதை மீண்டும் அடையும் மார்க்கமும் தெரியவில்லை!
தெரிந்தே தொலைத்தேனா! இல்லை என்னை தெரியாமல் தொலைத்தேனா!
கண்டு மீட்கும் எண்ணம் உண்டோ! இல்லை கண்டும் காணாமல் இருக்கும் மனம்தான் உண்டோ!
எங்கோ தொலைத்தேன் என் இதயத்தை! என்றோ தொலைத்தேன்"
தேவையில்லாத நேரத்தில் ஒரு மொக்கை கவிதை இளமதியின் இதயத்தில் தோன்றிவிட அவளுக்கு முடிவாக தெரிந்துவிட்டது தன் நிலை. தன் நிலை மறந்து அவன் நிழல் தேடிய நிலையில்லா இந்த நிலை எந்த நிலையில் தன்னை கொண்டு போய் நிறுத்தும் என்ற கலக்கம் அவள் கண்ணில் தோன்றியது.
'காதல்' உலகத்தை தன்னுள் இழுத்துக்கொண்ட ஒரு மாயை. அதற்கு ஈர்க்கும் சக்தி அதிகமாக உண்டு. அதனால் நாம்தான் அதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும். அது ஏனோ சற்று தாமதமாக இளமதிக்கு உரைத்தது.
'சொந்தம், பந்தம், சொத்து, மதிப்பு என்று வாழும் இவன் எங்கே? இதில் ஒன்றுமே இல்லாமல் பணத்துக்காக பெத்த பெண்களையே விற்க துணிந்த ஒரு குடும்பத்தில் பிறந்த நான் எங்கே? என் அக்காவுக்கும் இதே எண்ணம் இருந்திருக்கும். அதனால்தான் என்னவோ கிடைக்காத காதல் கொடுக்கும் ரணத்தோடு வாழ்வதைவிட போய் சேர்ந்து விடு என்று ரோட்டில் வேகமாக வந்த லாரிக்கு முன்னே கடவுள் அவளை விழ தட்டினார் போல. அந்த நிலைதான் எனக்கும் வருமா? அக்காவுக்கு சொந்தமானவனை எனக்கு சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கும் அளவுக்கு என் எண்ணம் தரைதாழ்ந்து போனதா? இவனை எதற்காக எல்லை தாண்டி எனக்குள் வர வழி கொடுத்தேன்? இனி என்னவாகும்?' இப்படி யோசித்துக்கொண்டே இருந்தவள் அவனின் கண்களை பார்க்க மறந்துவிட்டாள். ஒரு வேளை பார்த்திருந்தால் அதில் இவளுக்கான காதலை அவள் பார்த்திருக்கலாம். ஆனால் சூறாவளிக்குள் சிக்கித்தவித்த சிறகான அவளுக்கு மற்ற எதின் மேலும் கவனம் போகவில்லை.