நேரம் நள்ளிரவை தாண்டிக் கொண்டிருக்கிறது..இன்னும் தூக்கம் வரவில்லை.. நினைவெல்லாம் ஜோதி அக்காவையே சுற்றிக் கொண்டிருக்கிறது.
வளர்மதி அத்தை வீட்டுக்கு பக்கத்து வீடு ஜோதி அக்காவுக்கு.
பட்டுப்புடவை, நகை என அழகாக ஜொலித்த ஜோதி அக்கா மருதாணி வாசம் வீசிய தன் விரல்களால் என் கன்னம் தீண்டி "உன் பேர் என்ன.."னு கேட்டது தான் என்கிட்ட பேசிய முதல் வார்த்தை.
இப்போதும் நினைவில் அந்தக் குரலும் மருதாணி வாசமும் நிறைகிறது.
அத்தை வீட்டுக்கு லீவுக்கு செல்வதே ஜோதி அக்காவை ரசிக்கத்தான் என தோன்றியது கூட உண்டு.
ஒரு பிளாஸ்டிக் தட்டில் பாதிக்கு தூள் இருக்க ஒரு புறம் வெட்டிய இலையும் பக்கவாட்டில் ஒரு ஆணியில் நூல்கட்டையும் இருக்கும்.
ஒவ்வொரு இலையாக எடுத்து தூளை வைத்து உருட்டி.. பின்னால் லேசாக மடக்கி கைகளுக்குள் ஒருமுறை உருட்டி.. கண்களாலே அளவெடுத்து நூலைக் கட்டுவாள்.. பின் பொட்டுக்குச்சியை ஆட்டுவது மட்டும் தான் கண்ணுக்கு தெரியும்..
அதையே திரும்ப திரும்ப செய்து பீடிகளாக்கி.. இருபத்தைந்து பீடி சேர்ந்ததும் எண்ணி வைப்பாள்..
"கை விரசு அப்டி.. காலையில தட்டை தூக்கி முப்பது கட்டுக்கு உருட்டிருவா.."என்பாள் அத்தை.
பதினோரு மணிக்கு பீடி போட போகணும்.. பத்தரை ஆனதும் எண்ணி வைத்த பீடியை கட்டி கைகளுக்குள் வைத்து திருப்பியபடி கட்டை பீடிகளை உருவி சைஸ் பார்ப்பாள்.
இத்தனை நேரமும் வாயை மூடாமல் எதையாவது பேசிட்டே இருப்பாள் ஜோதி அக்கா.
"நேத்து அந்த நாடகம் பாத்தியா.."என ஆரம்பிப்பாள்..
"வாணி ராணில.. ஏதோ வெளிநாடுலாம் காட்டுறாங்க.. விளம்பரத்துல பார்த்தேன் நேத்து.."
"தெய்வமகள்ல காயத்திரி சத்யாவை கடத்திட்டா.. பாவம்.. சத்யா.. பிரகாஷ் காப்பாத்திடுவான் எப்டியும்.." என்று நம்பிக்கையாக சொல்லிக் கொள்வாள்.