இந்த மயிலிறக புக்குக்குள்ள வச்சுக்கோ.. குட்டி போடும்.. என சொல்லி நீ கொடுத்த மயிலிறகு என் புத்தகத்தினுள்..
அப்போது.. அந்த ஏதுமறியா வயதில் துளிர்விட்ட நேசத்திற்கு.. பின்னாளில் காதல் என பெயரிட்டேன் நான்..
உன்னுடன் விளையாடுவதற்கெனவே இரண்டு தெருக்களை கடந்து வருவேன்..
உச்சிக் குடுமியிலிருந்து.. இரட்டை ஜடை வயதுக்கு மாறிய பிறகும் மயிலிறகு குட்டி போடுமென நம்பிய சிறுபிள்ளையென என் விழிகள் உனைக் கண்டது..
மதிய உணவை பகிர்ந்து கொண்ட அந்த மரத்தடி நிழலில் இன்றும் நனையத் தோன்றுகிறது..
மீசை அரும்பிய வயதில்.. கவிதை என்ற பெயரில் சில கிறுக்கல்களை உன் நினைவாக யாருமறியாது ஒளித்து வைத்தேன்..
உன் மீதான என் நேசத்திற்கு நட்பென எல்லாரும் பெயரிட்டாலும்.. எனக்கு மட்டும் அது காதலென ஒளிர்ந்தது..
காலம் உன்னை கூண்டுக்குள் ஒடுங்க செய்துவிட்டது.. விடுமுறை நாட்கள் எல்லோருக்கும் வரமெனில்.. எனக்கு மட்டும் சாபம்..
தேர்வு அறைக்குள் அமர்ந்தபடி.. மனதிற்குள் ஒரு யாகத்தை நடத்திக் கொண்டிருக்கும் உன்னை ரசித்துக் கொண்டிருந்தேன் நான்..
பள்ளி படிப்பை முடிக்கையில்.. நினைவென எது இருந்தாலும் அதில் நீயுமிருந்தாய்..
இருவேறு திசையில் பயணிக்கும் பறவைகளென மாறிப்போனோம்.. இல்லாத அந்த நட்பும் தொலைந்திருந்தது..
கூடு அடையும் பறவையென ஊர் திரும்புகையில் உன்னை வேறு ஒருவனுக்கு சொந்தமானவளாக சந்திக்க நேர்ந்திருக்க வேண்டாம்..
இயல்பாக பேசி நகர்கிறாய்.. உன்னில் இருந்தது நட்பு தானோ..