உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்து அதில் தெளிவான பிம்பத்தை காட்ட முடியுமா உன்னால்..
அப்படித்தான்.. அவள் நினைவுகளிடம் இருந்து என்னை பிரித்து உன் நினைவுக்குள் மூழ்கடிக்க முயற்சிக்கிறாய்..
என் பக்கத்தில் அமர்ந்தாலும் அவளுக்கும் எனக்குமான அந்த சிறு இடைவெளி.. அது ஒரு கவிதை.. நீயோ உரிமையோடு தோள் சாய்கிறாய்.. உனை விலக்க மனம் ஒப்பவில்லை தான்..
சிறு தீண்டலுக்கே பழக்கப்படாதவள் அவள்.. இயல்பாக கை குலுக்குகிறாய் நீ.. தவறேதும் சொல்ல முடியாதது தான் உன் தீண்டல்.. ஆனாலும் உன் சிறு தீண்டலும் விரல்படா அவளோடான நிமிடங்களை நினைவில் இருத்துகிறது.
அவளுக்கு சுருள் சுருளாக அடர்ந்த கூந்தல்.. அவளின் அழகை மெருகூட்டுவதே அந்தக் கூந்தல் தான்.. உனக்கோ.. அடர்ந்த கருமையான நெடுங்கூந்தல்.. இது வேறு ஓர் அழகு..
அவள் கண்ணாடி தொட்டிக்குள் அலையும் மீன்களை விழிகள் விரித்து ரசிப்பாள்.. கூண்டுப் பறவைக்கு உணவளித்து மகிழ்வாள்.. நீயோ சொந்த வீடை தொலைத்த பரிதாப உயிர்களென காண்கிறாய் தொட்டி மீனையும் கூண்டுப் பறவையையும்..
அவள் விழிகளாலே சிலவற்றை பேசிவிடுவாள்.. உன் விழிகளில் சொற்கள் இல்லை.. காதல் தான் தெரிகிறது..
அவள் கண் மூடி ரசித்த அதே பாடல்.. நீயும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறாய்..
அவளுக்கு எல்லாம் வண்ணமயமாக இருக்க வேண்டும்.. நீ கருப்பு வெள்ளையை அதிகமாக ரசிக்கிறாய்.. என்னைப் போலவே..
மழை நேரத்தில் பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து உடைகளை நனைத்தபடி.. மழையை ரசிக்கும் உன் ரசனை அவளுக்கு கைவராது..
அவள் உடைகளிலும் அலங்காரங்களிலும் என்னை திரும்பி பார்க்க வைக்க சற்று கூடுதல் கவனமிருக்கும்.. நீ அத்தனை மெனக்கெடல் இல்லாமலே திரும்பி பார்க்க வைத்துவிடுகிறாய்..
உன்னளவுக்கு வெளிப்படையாக உளறிக்கொட்ட அவளுக்கு தெரியாது..
என்றோ கடந்து போனவளை எண்ணி புலம்பிக் கொண்டிருப்பவனை காதலிக்கும் உன் பொறுமை அவளுக்கு நிச்சயம் இருக்காது..
அவள்.. அவளுக்கு.. என புலம்பல்களோடு வாழ்ந்த என்னை.. மெல்ல மாற்றுகிறாய் நீ நானறியாமல்..
உடைந்த கண்ணாடியென எண்ணிய என் மனதின் காயங்களை ஆற்ற முயற்சிக்கிறாய்.. வடுக்கள் மட்டும் எஞ்சியிருக்கும் என நினைக்கிறேன்..