தலை பாரமாக இருக்கிறது.. நேற்றைய இரவு அருந்திய மதுவின் தாக்கம்..
உன் பிரிவிற்கு பிறகான பல விடியல்கள் இப்படித்தான்..
இதிலிருந்து மீண்டுவிட்டால் நலம் தான்.. ஆனால் உன் நினைவு என்னை மீளவிடுவதில்லை..
திடீரென அம்னீஷியா வந்து விடக்கூடாதா எனக்கு.. என பல நாட்கள் தவித்திருக்கிறேன்.. இப்போதும் விருப்பம் தான்..
இப்போதெல்லாம் மதுவோடு கழிகிறது என் இரவுகள்.. இருந்தும் என் ரணம் குறைவதில்லை.. உனக்கு பிடிக்காததை செய்ய நேர்கிறது.. அதுவும் உன்னாலே..
"ப்ரெண்ட் பெர்த் டே.. அதான் ட்ரீட்.. நான் நாளைக்கு பேசவா.."
"தண்ணீயா.."
"ம்.."
"அப்ப பேசாத என்கிட்ட.."
"இன்னைக்கு ஒரு நாள் டா.. ப்ளீஸ்.."
"கூடாது.. அப்டினா என்கிட்ட பேசாத.."
"சரி ஒரு நிமிஷம் பொறு.."
"ஹலோ.."
"எனக்கு தெரியும்.. நீ இப்ப தண்ணி அடிக்கத்தானே போகப்போற.."
"இல்லை.. நான் வரலைனு சொல்லிட்டேன்.. நீ சொல்லு.."
"நிஜமாவா.."
"ஆமா.."
"எனக்காகவா.."
"ஆ..மா.."
"உண்மையிலே தான சொல்ற.."
"ஒரே கேள்வியை எத்தனை தடவை கேட்ப.."
"ஐ லவ் யூ...."
என நீண்ட அந்த இரவின் உரையாடல் ஒவ்வொரு மது கோப்பையிலும் நிரம்பி வழிகிறது..
அலைபேசியின் குறுஞ்செய்தியொன்று.. வங்கியில் என் கணக்கு இருப்பை காட்டுகிறது.. இது உன் கணவனின்.. சொத்து மதிப்போடு ஒப்பிடுகையில் சாதாரணம் தான்.. நீ என்னை பிரிந்தது நியாயம் தான்..
யதேச்சையாக முகநூலில் உன் திருமண புகைப்படம் ஒன்று கண்ணில் பட்டது. எவ்வளவு ஆத்மார்த்தமான சிரிப்பு உன் இதழ்களில்.. அத்தனை எளிதாக என்னோடிருந்த நேசந்தனை கருக்கிவிட்டாயா.. எனக்கும் அது எப்படியென சொல்லிச் சென்றிருக்கலாம்..
அவ தான் போய்ட்டாளே.. அப்புறம் ஏன் இன்னும் இப்டி புலம்பிட்டு இருக்க.. என் காதல் தொலைந்தது அறிந்த எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள்.. என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.. விடை தான் இன்னும் கிடைக்கவில்லை..
இப்போதும் அலைபேசி எண்ணை மாற்றாமல் வைத்திருக்கிறேன்.. என்றேனும் நீ பேச நினைப்பாயென கருதி.. நீ நிச்சயமாக பேச நினைக்கமாட்டாய் என்பதையும் நானறிவேன்..
மதுவின் போதைக்கு அடிமையாகி.. இப்படி உன் பிரிவை காரணம் காட்டி.. மது அருந்துகிறேன் என நினைக்கத் தோன்றுகிறதா.. இல்லை.. உன் மீது நான் கொண்டிருந்த நேசம்.. சில கேள்விகளை.. மறைக்க செய்துவிட்டது.. அந்த கேள்விகளை விழுங்கிடவும்.. யாரேனும் உன்னை தவறாக பேசினால்.. ஆமாம் என ஒப்புக்கொள்ள மனம் வந்துவிடக்கூடாதெனவும் இந்த மதுவை நாடுகிறேன்..
நீ எளிதாக இன்னொருவனுடன் வாழத்தொடங்கி விட்டாய்.. எந்தப் பெண்ணும் என் மனதில் நுழைந்து விடமுடியாதபடியான நினைவின் பாரத்தை தந்துவிட்டு..