அம்மு..

228 11 14
                                    

 காலம் அருமருந்து.. அது எல்லாவற்றையும் மறக்க செய்யும்.. என்று நானும் உங்களைப் போலவே நம்பிக் கொண்டிருந்தேன்.

ஆனால் எதுவும் மாறவில்லை.. காலம் அதன் போக்கில் நகர்ந்து கொண்டே இருக்கிறது.

"எனக்கு மட்டும் ஏன் இப்படி.." "நான் 
ஏன் இப்படி இருக்கிறேன்.." "இதிலிருந்து மீளவே முடியாதா.." என்பதான கேள்விகள் எப்போதும் விடையில்லாது அலைந்து கொண்டிருக்கிறது என்னுள்.

உன்னை மறப்பது அத்தனை எளிதா என்ன.. விடியல் முதல் தூக்கம் தொலைத்த இரவுகள் வரை நாளெல்லாம் நீயே நிரம்பி வழிகிறாய் நினைவில்.

இந்த பேருந்தை உனக்கு நினைவிருக்கிறதா அம்மு.. ஒரு மழை மாலைப் பொழுதில் சாரல் மேல் தெறிக்க பயணித்தோமோ நாம் அதே பேருந்து இது.. தினமும் என்னை கடந்து செல்கிறது உன் கைகளால் என் முகத்திலிறைத்த அந்த சாரல் துளிகளை பரிசளித்தபடி..

அம்மு.. நீ பரிசளித்த அந்த ரோஜாச்செடியின் முகத்தில் தான் தினம் விழிக்கிறேன்.. அதன் ஒரு இலை சற்று வாடினாலும் எங்கோ என் பிரிவை எண்ணி நீ வருந்துகிறாய் என இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறேன். இது இன்னும் பூக்கிறது.. ஆனால் ரசிக்க நீ இல்லையே அம்மு..

முற்றத்து வேம்பிலிருந்து பழுத்த இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இலைகள் உதிர்வதை போல என் நினைவும் உன் மனதிலிருந்து உதிர்ந்து விடும் என்று சொல்லிச் சென்றாயே அம்மு.. எத்தனையோ இலையுதிர் காலம் கடந்துவிட்டது அம்மு. உன் நினைவெனும் இலை என் மனதில் பசுமையாய் ஒட்டிக் கொண்டேயிருக்கிறது அம்மு..

என் செவிகளில் விழும்படி.. யாரோ யாரையோ உன் பெயர் சொல்லி அழைத்தால்.. "அம்முன்னு சொல்லு நீ.. அது தான் எனக்கு பிடிச்சிருக்கு.. எப்பவும் நீ என்னை அப்டித்தான் கூப்பிடணும்.." என்ற உன் சொற்கள் நினைவை சூழ்ந்து உன்னை அழைக்க நா துடிக்கிறது.. ஆனால் எங்கோ இருக்கும் உன் செவிகளில் அது கேட்கப்போவதில்லை என்ற உண்மையையும் சேர்த்து விழுங்கிக் கொண்டிருக்கிறேன் அம்மு.

உன் விரல் கோர்த்து நடந்த அந்த சாலையில் நடக்கிறேன் அம்மு.. நம் கதைகளை கேட்ட பல மரங்கள் இன்றில்லை அம்மு. நம்மை விரைவாக ஒரு சில வாகனங்கள் கடக்கும் வேளை.. "என்ன அவசரமோ.. கொஞ்சம் மெதுவா போகக்கூடாதா.." என்று நீ சொல்வாய். இன்று பல நூறு வாகனங்கள் அதைவிட அதிவிரைவாக இந்த சாலையில் செல்கிறது அம்மு.. இன்று நீ என்னோடிருந்தால் அதையே சொல்லியிருப்பாயா.. யோசித்தபடியே கடக்கிறேன் சாலையை.. உன் நினைவோடு வாழ்ந்தபடி.

நம் சந்திப்புகள் நிகழ்ந்த ஒவ்வொரு மாலையும் இந்த மரத்தின் நிழலில் நான் அமர்வேன்.. நீ வெயிலில் நனைந்து கொண்டிருப்பாய்.. ஏன் இப்டி லூசு மாதிரி பண்ற.. நிழல்ல வந்து உட்காரு.. என்பேன். எனக்கு இந்த வெயில் பிடிச்சிருக்கு.. என்றபடி நனைந்து கொண்டிருப்பாய். நெடுநேரமாக நான் நனைகிறேன் அம்மு.. வெயிலிலும் உன் நினைவிலும்..

என் சட்டை பைக்குள் சாக்லேட் இருக்கிறது.. உன்னிடம் கற்றுக் கொண்டது தான் அம்மு.. நீயும் உன் கைப்பையில் இப்படித்தானே வைத்திருப்பாய்.. பேருந்தில் பக்கத்தில் வந்தமரும் ஏதோ ஒரு குழந்தைக்காக நீ வைத்திருப்பாய்.. நான் கேட்டால்.. நீ என்ன சின்ன பாப்பாவா.. என்பாய். நீ மட்டும் சாப்பிடுற.. நீ என்ன சின்ன பாப்பாவா.. என்றால்.. ஆமாம் நான் சின்ன பாப்பா தான் என்று கண் சிமிட்டுவாய். தினமும் இனிப்புகளை என் சட்டைப்பையில் சுமந்தலைகிறேன். என்றேனும் உன்னிடம் கொடுப்பேன்.. அப்போதும் நான் சின்ன பாப்பா தான் என்று கண்சிமிட்டியபடி அதை வாங்கிக் கொள்வாய் தானே அம்மு.

என் பாதம் நனைக்கும் இந்த அலை நாம் என்றோ விட்டுச்சென்ற நம்சுவடுகளை பத்திரமாக வைத்திருக்குமா.. என்னுள் இருக்கும் உன் நினைவுகள் போல..

ஒரே அரிசியில் நம் பெயர் எழுதினோமே.. அந்த அரிசியை யாருமறியாது ஒளித்து வைத்திருப்பாயா.. இல்லை யார் கையிலும் அகப்படாமல் தொலைத்திருப்பாயா அம்மு..

உன் விரலிடுக்குகளை என் விரல்கள் அழுந்தப்பற்றிய அந்த கணம் மீண்டும் வரவே வராதென அறிந்தும் என்னால் ஏக்கம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை அம்மு..

தூக்கம் தொலைத்தே என் இரவுகள் பல நகர்கிறது அம்மு.. என் நினைவெல்லாம் நீ நிறைந்திருக்கிறாய்.. ஒரே ஒரு கேள்வி அம்மு உன்னிடம்.. என்னை ஏன் பிரிந்தாய் அம்மு..

உதிரிப்பூக்கள்Where stories live. Discover now