எல்லோருக்கும் சிறுவயதில் பிடித்தமான ஓர் டீச்சர் கண்டிப்பா உண்டு.
அப்படித்தான் அவனுக்கு அமுதா டீச்சர். அவன் நாலாங் கிளாஸ் படிக்கும் போது கணக்கு பாடம் எடுத்தாங்க. அவனுக்கு கணக்கு ரொம்ப பிடிச்ச பாடம். அதனாலேயே அமுதா டீச்சரையும் ரொம்ப பிடிச்சிடுச்சு.
அமுதா டீச்சரின் காட்டன் சேலையின் வண்ணங்களும் சேண்டல் பவுடர் வாசனையும் கண்ணாடி வளையல்களின் சத்தமும் மெலிதான கொலுசொலியும் பூப்போட்ட கர்சிஃபும் இன்னும் அவன் நினைவுகளில் இன்று பூத்த மலரென..
மத்த எல்லா டீச்சரை விடவும் அமுதா டீச்சரை அதிகமாக பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை அவனுக்கு.
பெருக்கல் வாய்ப்பாட்டை இப்பவும் தலைகீழா கூட சொல்லத் தெரியுதுனா அமுதா டீச்சர் சொல்லிக் கொடுத்ததால தான்.
அமுதா டீச்சர் அவன் பேரை மட்டும் சுருக்கிக் கூப்புடுறது இன்னும் மனசிலே இருக்கு. வேற யாராவது அப்படி கூப்பிட்டாலும் அது அமுதா டீச்சர் கூப்பிடுறது போலில்லை அவனுக்கு.
ஒரு நாள் அமுதா டீச்சர் அவன்கிட்ட பேனா வாங்கி எழுதுனாங்க இன்னும் அந்த பேனாவ அப்படியே வைச்சிருக்கான்.
நாலு முடிச்சு அஞ்சு போனப்புறமும் அமுதா டீச்சர்தான் கணக்கு டீச்சர்.
அமுதா டீச்சர் சொல்லிக் கொடுத்த எண்களைவிட அதிகமா அவன் மனம் முழுக்க அமுதா டீச்சர் தான் இருந்தாங்க.
டீச்சர் கிளாஸ்ல பொதுவா புக் கேட்டாக்கூட தன்கிட்டதான் கேட்குகிறதா நினைச்சு அவன் முத ஆளா எடுத்துக் கொடுப்பான். அந்த நேரம் அவன எல்லாரும் பொறாமையா பாக்குறதா தோணும் அவனுக்கு.
ஆனா அது கொடுத்த பூரிப்பு வருடங்கள் கடந்த பின்னும் அவனுக்கு புன்னகையை பரிசளிக்கிறது.
இப்பவும் யாராவது கணக்குல உன்ன மிஞ்ச முடியுமானு சொல்லும் போது "எல்லாம் அமுதா டீச்சரால தான்"னு ஆரம்பிச்சு சொல்றதுக்கு நிறைய இருக்கு அவன்கிட்ட.
அஞ்சு முடிச்சு ஆறு போகும்போதும் அமுதா டீச்சர் தன்கூடவே வந்துடணும் போலருந்தது அவனுக்கு. அப்படியே தான் காலேஜ் முடிக்கிற வரைக்கும் அமுதா டீச்சர்கிட்டயே கணக்கு படிக்கணும்னு ஆசைப்பட்டான்.
ஆனா அவனோட துரதிர்ஷடம் அந்த பள்ளியில் அஞ்சு வரை தான் இருந்துச்சு.
நேசித்த மழை அல்லாத விருப்பமற்ற வெயிலோடு பயணிக்கும் நாட்கள் போல அமுதா டீச்சர் அல்லாத கணக்கு டீச்சர்களிடமே அவனின் படிப்பு தொடர்கிறது.
இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளென அவன் மனம் உதிர்க்கிறது அமுதா டீச்சரின் நினைவுகளை.
ஆனா இப்பவும் அமுதா டீச்சர் மட்டும்தான் கணக்கு டீச்சர் அவனுக்கு.