லெட்சுமி.. இந்த வேப்பமரத்தை வெட்டணும்னு காலையில வந்து மூத்தவன் சொல்லிட்டுப் போறான்..மனசில்லை தான்.. ஆனா வெட்டித்தான் ஆகணும் லெட்சுமி..
இந்த ஓட்டு வீட்டுல இருக்க முடியாதாம்.. இடிச்சிட்டு மச்சு வீடா கட்டணுமாம்..
கட்டிக்கட்டும்.. இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்கப்போறேன் லெட்சுமி..
நீ இல்லாம நான் இருப்பேன்னு நினைச்சு கூட பாத்ததில்லை..
இளையவன் கூடப்படிச்ச பிள்ளைய கட்டிக்கிட்டானாம்..
ஊருக்கு வரவேயில்லை.. பேரப்பிள்ளை பிறந்ததுக்கு கூட..மூத்தவன் பொண்டாட்டி ஜாதகம் பாத்தாளாம்.. கிரகம் சரியில்லை.. வேற வீட்டுக்கு போணும்னு சொல்லுதான்னு சொல்லிட்டு பக்கத்து தெரு கணேசன் வீட்டில வாடகைக்கு போய் இருக்கா.. இந்த கெழவனுக்கு நாம கஞ்சி ஊத்தவான்னு நினைச்சிருப்பா..
எதுவும் நல்ல நாள்னா கஞ்சியை பிள்ளையட்ட குடுத்துவிடுவா..
கறிக்குழம்புலாம் இப்ப சாப்பிட பிடிக்கிறதில்லை.. உன் கைருசி அவளுக்கு வராதுல்ல..
கருவாட்டுக் குழம்பு சாப்பிடணும் போல இருக்கு.. உன்கிட்ட மாதிரி உரிமையோடு யாருகிட்ட போய் கேட்பேன்..
விஜி வந்தா போன வாரம்.. அவ பிள்ளைக்கு பிறந்த நாளாம்.. ஒன்னும் நியாபகத்துல இருக்க மாட்டிக்குது.. வந்து பிள்ளையள கண்ல காட்டிட்டு உடனே போய்ட்டா..
இரண்டு நாள் இருந்துட்டு போன்னு சொல்லிருக்கலாம்.. சொன்னா நம்மள வேல ஏவுதான்னு நினைச்சுப்பா.. அதான் நான் ஒன்னுஞ் சொல்லலை லெட்சுமி..
நாலு நாளா ஒரே இருமல்.. பனி விழ ஆரம்பிச்சிட்டுல்ல.. நீ இஞ்சி தட்டிப்போட்டு கடுங்காப்பி போட்டுக் குடுத்தா.. கொஞ்சம் லேசா இருக்கும் தான்..
நீ இல்லைன்னா நான் வெறும் உடம்பு மட்டும் தான்னு இப்பத்தான் லெட்சுமி புரியுது.. ஆனா உனக்கு என்னை கட்டிக்கிட்டு வந்த நாள்லே தெரிஞ்சிருக்கும்..
இன்னைக்கு தான் காலண்டர்ல பாத்தேன்.. ஆடி பிறக்க இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு..
நீ செத்து அஞ்சு வருஷம் ஆகப்போகுது லெட்சுமி..
என்னைவிட உனக்கு நல்லா தெரியும்ல லட்சுமி.. நீ இல்லாம நான் இருந்துக்கிட மாட்டேன்னு.. அப்புறம் ஏன் லெட்சுமி எனக்கு முன்னாடி போய் சேந்துட்ட..
ஒவ்வொரு நாளும் கண்ண மூடி படுக்கும் முன்னாடி ஒன்னே ஒன்னு தான் லெட்சுமி நினைச்சுப்பேன்.. நாளைக்கு விடியக்கூடாது எனக்கு மட்டும்..