எப்போதும் நினைவில் நாட்களை பதியச் செய்து கொள்ளும் பழக்கம் இருந்ததில்லை. நெருங்கிய நண்பர்களின் பிறந்த நாளைக் கூட நினைவில் இருத்திக் கொண்டதில்லை. அவ்வளவு தான் என் நினைவின் வலிமையென கருதி மறுத்தும் தவிர்த்தும் வந்திருக்கிறேன்.
ஆனால் உன்னை சந்தித்த பின் மாற்றம் நேர்ந்து விட்டது. உன்னுடனான ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சிறப்பு இருப்பதாகவும் அதை நினைவிற் பதித்துக் கொள்ளவும் விரும்பினேன்.
ஏப்ரல் 18.. குறுஞ்செய்தி பரிமாற்றங்கள் தொடங்கிய நாள்..
ஏப்ரல் 22.. முதல் அலைபேசி உரையாடல்.. இனம்புரியா பரவசம்.. பயம்.. பதற்றம்.. சொற்களில் அந்தச் சில நிமிடங்களை விவரிக்க தெரியவில்லை. இதுதான் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் தருணமோ.. என எண்ணியதுண்டு. ஆனால்.. உறுதியாக அறிந்து கொள்ளும் வழி தெரியவில்லை.
மே 12.. முதல் தனிமை சந்திப்பு..கற்பனைகள் பல சிறகு விரிக்க தொடங்கிய நாள்.
முதல் சண்டை.. ஏதோவொரு சின்ன.. உதறி தள்ளக்கூடிய காரணம் தான்.. ஜீன் 26.. இல்லை.. 29.. சரியாக தெரியவில்லை.
இப்படியாக பல நாட்களை நினைவில் வைத்துக் கொள்ள முயன்றேன்.. இல்லை.. இயல்பாகவே.. நினைவில் இருந்தது..
உன்னுடனான பொழுதுகளுக்கு தனிச்சிறப்பு இருப்பதாகவே நம்பிக்கை கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளையும் நினைவு வைத்து.. அடுத்த ஆண்டு.. அதற்கு அடுத்த ஆண்டு.. இன்னும் பல ஆண்டுகள் கடந்த பின்னும்.. அதை உன்னிடம் சொல்லி மகிழ மனம் விரும்பியதும்.. நினைவில் எல்லாம் தானாகவே பதிந்துவிட்டது.
இனி தொடர்பில்லை.. சந்திக்க தேவையில்லை.. பேசிக் கொள்ள அவசியம் இல்லை.. என்று பிரிவது உறுதியான பின்னர் தான்.. மெல்ல மாற்றம் நிகழத் தொடங்கியதோ என்னவோ..
இன்று அணிந்திருக்கும் உடை.. உனக்கு பிடித்திருப்பதாக நீ சொன்னது.. புன்முறுவலோடு உன்னிடம் பகிர எண்ணி.. ஆவலாக அலைபேசியை கையில் எடுத்ததும் தான்.. “இனி நமக்குள் எதுவுமில்லை..” என்ற குரல் செவிகளில் எதிரொலிக்கிறது.
அலுப்பும் சலிப்புமாக அலைபேசியை எடுத்த இடத்தில் வைக்கிறேன்.. அன்பும் மகிழ்ச்சியும் மட்டுமே நிறைந்து இருந்ததாக எண்ணிய நாட்கள் எல்லாமும் வலியும் வேதனையும் மட்டும் தருவதாக மாறத் தொடங்கியது.
தூக்கம் தொலைந்த இரவுகள் பல.. ஏப்ரல்.. மே.. டிசம்பர்.. ஜனவரி.. ஜூலை.. 26.. 18.. 2.. 4.. என பல தினங்களையும் அதோடு தொடர்புடைய உன்னையும் மனதில் நிறைத்து.. இவையெல்லாம் எப்போது நினைவடுக்கில் இருந்து தொலையும் என தவிக்க வைத்திருக்கிறது.
நாட்கள் எப்போதும் போலவே நகர்ந்தது நீயின்றி உன் நினைவுகளுடன். சில நாட்கள் மட்டும் நினைவில் இருந்து அகலத் தொடங்கியிருக்கிறது.. அதோடு தொடர்புடைய நீ அகல மறுத்த போதும்.
ஆனாலும்.. அந்த நேசமும்.. மனதில் அந்த நேசத்திற்கான ஏக்கமும் தவிப்பும் தொலைய மறுக்கிறது..