தினமும் அதே நிறுத்தத்தில் பேருந்தில் ஏறிக்கொள்வாள்.புடவையில் தான் வருவாள் பெரும்பாலும்.
முகம் இயல்பாக இருப்பது போல் தோன்றினாலும் வசீகரமான அந்த விழிகளில் மெலிதாய் வழிந்தோடும் சோகம்.
இதழ்களில் புன்னகை அபூர்வம்தான் ஏன் யாருமே கண்டதில்லை.ஆனால் மழலை முகம் கண்டால் விழிகளில் மெலிதாய் ஓர் புன்னகை தோன்றும். பேருந்தில் இடமிருந்தால் சாளரக் கம்பி அருகில் அமர்ந்து வானம் நோக்குவாள். இல்லையென்றால் கம்பியை பிடித்தபடி சிலையென நிற்பாள்.
சில நேரங்களில் விழியோரம் துளிர்க்கும் ஒற்றைத்துளி யாருமறியும் முன்னர் காணாது போகும். குரலில் கூட ஏதோ வசீகரம் உண்டு. பயணச்சீட்டுக்காக மட்டுமே ஒலிக்கும் அந்தக் குரலும். யாருடனும் பேசுவதில்லை. வலிந்து பேச நினைப்பவர்களையும் விலகித்தான் செல்கிறாள்.
இவள் ஏன் இப்படி செய்கிறாளென ஒவ்வொருவருக்கும் ஓர் அனுமானம் இருந்தது. ஆனால் யாருக்கும் அவள் மீது வெறுப்போ பரிதாபமோ இருப்பதாக தோன்றவில்லை.
என்றாவது அவளிடம் கேட்க வேண்டுமென சில கேள்விகள் பேருந்தோடு அலைந்தது.
இன்றும் அதே நிறுத்தம்
வழக்கத்திற்கு மாறாக
பட்டுப்புடவையில்
கை நிறைய வளையல்
பூசிய மஞ்சளில் மின்னும் முகம்
இதழ்களில் புன்னகை
விழிகளில் உற்சாகம்கேள்விகள் எல்லாம் காற்றோடு மறைய தினம் இது போல் காண ஏங்கியபடி தொடர்கிறது பயணம்
நாளையும் அவள் வருவாளா இது போலே..