நீயும்.. இல்லை நீயாவது..

100 7 0
                                    


இந்த நேரம் நீ என்னை நினைத்துக் கொண்டிருப்பாய்.. என்ற எண்ணம் தரும் உவகையே போதுமானதாக தோன்றியது ஒரு சமயத்தில்.. உன் நினைவில் துளியாவது நான் இருப்பேனா என எண்ணத் தோன்றுகிறது இந்த வேளையில்..

செவிகளை வந்தடையும் இந்தப் பாடல் உனக்கு மிகவும் பிடித்தது அல்லவா.. உனக்கு பிடிக்கும் என்பதாலே எனக்கும் பிடித்துப் போன அந்தப் பாடல்.. இப்போது உன்னை நினைவூட்டி வலி நிறைந்த எண்ணச் சுழலுக்குள் மூழ்கடிக்க செய்யும் வேலையை திறம்பட செய்கிறது.

வாட்ஸப்பில் உன்னுடைய லாஸ்ட் ஸீன் பார்ப்பது மட்டுமே இப்போதெல்லாம் செய்கிறேன்.. எதுவும் அனுப்ப தோன்றுவதில்லை.. உரையாடலை ஆரம்பிக்கவோ.. நீட்டிக்க எண்ணி அர்த்தமற்றதாய் ஏதேனும் அனுப்ப வேண்டுமென்ற மெனக்கெடல்களும் இல்லாமல் போனது ரணமோ எனத் தோன்றுகிறது..

பேஸ்புக்கில் ப்ரொபைல் பிக்சர் மாற்றியிருக்கிறாய்.. அழகாகத்தான் இருக்கிறது.. முன்பிருந்ததை ரசித்ததை போல ரசிக்கத் தோன்றவில்லை.. ஆனாலும் அவ்வப்போது அதை பார்த்துக் கொண்டிருக்கும் காரணம் புரிபடவேயில்லை..

நள்ளிரவு இரண்டு மணியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.. தூக்கம் கலைந்து கைகளால் துளாவி.. அலைபேசியை உயிர்ப்பித்ததும் மனம் ஏங்குகிறது.. அன்றொரு நாளில் இதே வேளையில் போன் செய்துவிட்டு.. “பேசணும் போல இருந்துச்சு.. அதான் பண்ணேன்..”என்றாயே.. இப்போது பேசத் தோன்றவில்லையோ.. நினைக்கையில் விழிகளின் ஓரம் துளிர்க்கும் கண்ணீர்த் துளி இன்னும் அந்த நேசம் உயிரோடிருப்பதை உணர்த்திக் கொண்டிருக்கிறது.

பிரிவுக்கு பிறகான சந்திப்புகள் எப்படியிருக்கும்..  கண்களில் வலியுடன்.. மனதில் இருக்கும் எதுவும் வெளிவராமல் மௌனத்திற்குள் புதைந்து.. இல்லை யாரோ போல் கடந்து விடுவோமோ.. ஏதேதோ எண்ணங்கள் தோன்றி மறைகிறது..

ஒருவேளை.. நீயும் இதே போல் தான் இருக்கிறாயோ.. இப்போது..

வேண்டாம்.. நீயாவது கடந்துவிடு இந்த அன்பின் நினைவை.. வலியை..

உதிரிப்பூக்கள்Where stories live. Discover now