நாப்பது நாள்..

132 13 32
                                    

நாட்காட்டியின் தாளை கிழித்து விட்டு.. கைகளில் இருந்த தாட்களை எண்ணத்தொடங்கினாள்..

நாப்பது.. தாட்கள் இருந்தன.. பயமும் பதற்றமும் உடலெங்கும் பரவியது..

இந்த நாளை எப்படி கடக்கப்போகிறேனோ கடவுளே.. என்று கதறத் தொடங்கியிருந்தது அவள் மனம்..

கல்யாணம் ஆகி எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட பின் வரும் எத்தனையாவது நாப்பது நாளோ இது.. அவள் அறியாள்..

ஆனால் இந்த நாப்பதாவது நாள் கடந்த பின் வரும் வலி..

கல்யாணம் ஆன மூன்றாவது மாதம் முதல்முறையாக நாள் தள்ளிப்போனதை உணர்ந்து.. நாட்களை எண்ணத்தொடங்கினாள்..

நாப்பது நாள்.. அவனிடம் எப்படி சொல்வது என கற்பனைகள் பல உதித்தன..

"உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.." என்றாள்.

"ம்.. சொல்லு.." என்றான்..

“அது.. அது..”என சொற்களின்றி தடுமாறத் தொடங்கியிருந்தாள்..

ஆதரவாய் அவள் கைகோர்த்து.. “என்னமா.. சொல்லு..”என வினவினான்.

“அ.. அது.. நாள் தள்ளிப்போச்சு..”என சிறு பதற்றத்தோடு சொல்லி முடித்து அவன் முகம் நோக்கினாள்.

அவள் சொன்னதின் பொருளுணர்ந்து.. அவன் கண்களின் ஒளி கூடியது.. தன் கைகளால் மெல்ல அவள் வயிற்றைத் தடவினான்.

“நாளைக்கு லீவு சொல்லிடுறேன்.. ஹாஸ்பிட்டல் போகலாம்..”என சொன்னான்..

இருவரின் மனமும் மகிழ்ச்சி தளும்ப கடந்த அந்த இரவு நீளமானதாய் தோன்றியது..

மனதில் குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்.. எந்த ஸ்கூல்ல சேர்க்கலாம்.. ஆணா இருக்குமா.. பெண்ணா இருக்குமா.. என ஏதேதோ கற்பனைகள் இருவருக்கும்..

“எனக்கு பொம்பள பிள்ளை தான் வேணும்.. குட்டியூண்டு அப்டியே உன்னை மாதிரி..”என அவன் சொல்ல.. அவள் “இல்லை.. எனக்கு பையன் தான் வேணும்..”என சொல்ல.. இருவரின் உரையாடல் நீண்டது அந்த இரவறியும்.

அடுத்த நாள்.. அவன்.. “வா ஹாஸ்பிட்டல் போகலாம்..” என அழைக்க.. “வேண்டாம்..” என அழத்தொடங்கினாள்..

“என்னாச்சு.. ஏன் அழுற..”என அவன் பதற்றமாக கேட்க.. அழுகையின் ஊடே.. “வீ.. வீட்டுக்கு தூரமாகிட்டேன்..” என அவள் சொன்னாள்.

ஒரு நொடியில் தன் கனவெல்லாம் கலைந்த சோகத்தை மனதில் புதைத்துவிட்டு.. “ஏ.. லூசு.. இதுக்கு ஏன்டீ அழுற.. இன்னும் நாளிருக்கு.. நமக்கு என்ன அவ்ளோ வயசாகிடுச்சா.. என்ன.. நீ அழாத..”என அவளை சமாதானம் செய்தான்.

அவன் வலியும் ஏமாற்றமும் கலந்த அந்தக் குரல்.. அவளை வதைக்க.. அவன் மார்பில் முகம் புதைத்து அழுது தீர்த்தாள்.

துளிர்த்த அந்த ஒரு துளி கண்ணீரையும் அவளறியாமல் மறைத்தான் அவன்.

அதன்பின் அவள் நாள் தள்ளிப்போவதை அவனிடம் சொல்வதில்லை. ஆனாலும் அவளின் பதற்றத்திலே அவன் உணர்ந்து கொள்வான்.

பலமுறை அந்த ஏமாற்றத்தின் வலியை சகித்துக் கொண்டாள்.

யார் யாரோ சொன்னதைக் கேட்டு.. எத்தனையோ மருத்துவமனைகளின் மருந்து வாடையை நுகர்ந்தபடி நாட்கள் நகர்ந்தன.

யாரிடம் என்ன குறை.. என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. எந்த மாதிரியான உணவு.. எனப் பல மாற்றங்கள்.. ஏங்கித்தவித்த அந்த ஒற்றை வரத்திற்கென..

எத்தனையோ முறை வேண்டுதல்கள் வைத்துவிட்டாள் ஒவ்வொரு கடவுளிடமும்..

ஏமாற்றத்தின் வலியை அவளறியாமல் மென்று விழுங்கும் அவன் அன்பில் தன்னுடலையே வெறுத்த ஒரு நாளில்.. “என்னை விட்டுப் போயிடுங்க.. வேற யாரையாவது கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோட சந்தோஷமா இருங்க..”என அவள் சொன்னதிற்கு பதிலாக தன் கைரேகைகளை அவள் கன்னத்தில் பதித்தான்.

அடுத்த நொடி அவளைக் கட்டியணைத்து.. “குழந்தை மட்டும் தான் வாழ்க்கையாடீ.. உனக்கு நான்.. எனக்கு நீ.. அதுமட்டும் போதும் டீ.. இந்த வாழ்க்கை முழுக்க..”என உருகிய அவன் காதலுக்கு தான் தகுதியானவள் தானா.. என பல நேரங்களில் தவிப்பாள்.

இந்த முறையாவது தங்கள் ஏக்கம் தீருமாவென என தவித்தாள். ஆனால்..

அவன் முகம் காணமுடியாமல் தனிமைக்குள் தன்னை புதைத்து கதறி அழத்தொடங்கினாள்.

இரத்தம் கசியத் தொடங்கியது அவள் உடலில்.

உதிரிப்பூக்கள்Where stories live. Discover now