என் தேடல் அவளில்லை. அவள் விழிகள்.
என்ன உளறுகிறாய்!
உளறில்லை. அந்த விழிகளை மட்டும் மீண்டுமொரு முறை காண வேண்டும்.
அப்படி என்ன கண்டாய் அந்த விழிகளில்?
அந்த விழிகளில் ஓர் வசீகரம் இருந்தது.
அப்படியா!
ஆம். அரை மணி நேர பயணம் முழுதும் அந்த விழிகளைக் கண்டேன்.
அவள் அழகாக இருந்தாளா?
அந்த விழிகளுக்கு சொந்தக்காரி அழகில்லாது போவாளா!
நல்ல நிறமோ!
சரியாக நினைவில்லை.
அவள் முகம் எப்படி இருந்தது?
அவள் முகம் நினைவிலே இல்லை.
பின் அப்படி அவளை தேடுவாய்!
அந்த குறும்பு மின்னும் விழிகள் நினைவிருக்கிறதே!
அரை மணி நேர பயணத்தில் விழிகள் மட்டும்தான் கண்டாயா!
ஆம். என் விழிகளுக்கு வேறேதும் புலப்படவில்லை.
அருகிலிருந்த குழந்தையோடு விளையாடினாள்.
அதைக் கண்டாயா?
ஆம். அந்த விழிகளில் குழந்தையின் சிரிப்பும் அவளின் குறும்பும் கலந்த குதூகலம் மின்னியதே!
அவள் உன்னை கவனிக்கவில்லையா?
நோக்கினாள் ஒரு கணம். பயணிக்கும் நேரம் சாளரம் வழி நோக்கும் மனிதர்களைப் போல் சட்டென பார்வை கடந்துவிட்டது.
அலட்சியமாக கடந்துவிட்டாள்.
அலட்சியமல்ல அது.
வேறென்ன
தெரியவில்லை. ஆனால் அந்தக் கணம் பரவசமொன்று என் உடலெங்கும் பரவி இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.
உன் தேடலில் அவள் விழிகளைக் காண்பாயா!
நிச்சயமாக. மீண்டும் அந்த விழிகளின் குறும்பும் புன்னகையும் பரவசமும் சோகமும் எல்லாமும் காண வேண்டும்.