இன்றும் அதே போல் இருக்கிறாள்.
பள்ளி பருவத்தின் முதல் தோழியவள். விழிகளில் இன்னும் அதே சிறுபிள்ளைத்தனம்.
காலத்தின் கொடுங்கரங்களில் அவளையும் பறிகொடுக்க நேரிடுமென அறியாது குதூகலித்த நாட்களெல்லாம் என் வாழ்வின் வரம்.
"நீ வளந்து இவ்ளோ உயரமா பெரிசானதும் என்ன வேலைக்கு போவ"
"நான் டாக்டராகி எல்லாருக்கும் ஊசி போடுவேன். நீ என்ன வேலைக்கு போவ"
"நான் டீச்சர் வேலைக்கு போவேன்"
"அப்ப கம்பு வச்சு என்னலாம் அடிப்பியா"
"ஆமா அன்னைக்கு நீ என் முட்டாய புடுங்கிட்டல நான் உன்ன நல்லா அடிப்பேன்"
"அப்ப நீ காய்ச்சல்னு என்கிட்ட வருவல்ல அப்ப உனக்கு பெரிய ஊசியா போடுவேன் பாரு"
"எனக்கு ஊசினா பயம் ஊசி போடாத" என்று அவள் விழிகள் வருந்த
"அப்ப நீயும் என்ன அடிக்கக் கூடாது சரியா"
"ம் சரி" என்று புன்னகை பரிமாறிக் கொண்டோம் இலைகள் உதிர்த்த அந்த மரத்தடியில்.
இப்போது அவள் டீச்சராக இருக்கிறாளா என தெரியாது. ஆனால் நான் டாக்டராக இல்லை என்பது உறுதி.
"அங்க பாரு ஏரோப்ளேன்" என குதூகலம் கொண்டோம்.
"நீ ஏரோப்ளேன்ல போகும் போது எனக்கு டாட்டா காட்டுவியா"
"காட்டுவேன். நீ போனா எனக்கு டாட்டா காட்டணும் சரியா" என எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது அந்த நாளில்.
என் வாழ்வில் நினைவின் வழியெங்கும் அவள் தடங்கள். அவள் நினைவில் துளிர்க்கும் புன்னகை எப்போதும் என் இதழில்.
தப்பா எழுதிருக்க பாரு சரியா எழுது என்று என் தலையில் குட்டியவள்
டீச்சர் இவன் என் மிட்டாயை புடுங்கிட்டான் என்று அழுதவள்
கீழ விழுந்திட்டியா ரொம்ப வலிக்குதா என்று அன்புடன் வினவியவள்
என் அன்புத்தோழி நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளை சந்தித்தேன்
அவளின் செல்லச் சண்டைக்காக நான் ஏங்க
கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறாள் அவள் கணவனுடன்...
இன்றும் என்றும் அப்படியே இருப்பாள் என் நினைவில்..