அது ஒரு பௌர்ணமி இரவு..
"கமலி.."என்றான்..
"ம்.."என்றாள் அவள்.
"உனக்கு என்ன வேணும்.."
"எனக்கு என்ன வேணும்..ஒன்னும் வேண்டாம்.."என்றபடி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..
"நீ ஏன் பிள்ள இப்டி இருக்க.."என்றான்..
"எப்டி இருக்கேன்.."
"புருஷன் கிட்ட அது வேணும் இது வேணும்னு கேட்கிற பொம்பளைங்கள தான் பார்த்திருக்கேன்.. நீ என்னடான்னா நானே கேட்டாலும் வேண்டாங்குற.." என லேசாக சலித்துக் கொண்டான். இது அவனுக்கு பழகிப் போனது தான்.
எழுந்து ஜன்னலை திறந்தாள். பௌர்ணமி நிலவின் ஒளி அந்த சிறிய அறைக்குள் பரவியது. லேசாக காற்றும் வீசியது..
"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா.."என்றாள்.
முகத்தில் புன்னகை மலர.. "கேளு.." என்றான்.
"என்னை விட்டு போகாதீங்க.. வெளியூர்.. வெளிநாடு.. எதுவும் வேணாம்.. இந்த ஊர்லே எதாவது பிழைப்பை பாருங்க.. சாயந்திரமானா நீங்க வருவீங்கனு எதிர்பார்த்து காத்திருக்கணும்.. பிள்ளைங்க தூங்குன பிறகு உங்க நெஞ்சில தலை வச்சு படுத்துக்கணும்.. அவ்ளோதான் வேணும் எனக்கு.. மச்சுவீடும் வேணாம்.. நகைநட்டும் வேணாம்.."என்ற அவள் மனதின் சொற்களெல்லாம் மௌனமாய் கண்ணீராய் அவன் நெஞ்சில் வழிந்து கொண்டிருந்தது.
"கமலி.. என்னால மட்டும் நீ இல்லாம இருக்க முடியுமா.. இரண்டு வருஷம் அங்க போனா நல்லா சம்பளம் கிடைக்கும்னு சொல்லுதான்.. இந்த சின்ன வீட்டுக்குள்ள எத்தன நாள் தான் இருக்கது.. நம்ம இருந்துக்கிடுவோம்.. பிள்ளையளுக்கு ஒரு நல்ல வீடு வேணாமா.. இரண்டு பிள்ளையளையும் நல்லா படிக்க வைக்கணும்.. உனக்கு ஒரு நெக்லஸ் வாங்கணும்.. தங்க வளையல் வாங்கணும்.."என ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான் அவன்.
அவன் பேசி முடித்ததும் "நான் இனி அழமாட்டேன்.. நீ எங்கு வேண்டுமானாலும் போ.. ஆனால் என்னிடமே திரும்பி வந்துவிடு.." என்பதை அவன் கன்னத்தில் தன் இதழ்களால் உரைத்தாள்.
அந்த இரவை நினைவில் நிறுத்திக் கொள்ள அவள் மனம் துடித்தது.. ஏன் என்பது அவளுக்கே விளங்கவில்லை..
பிழைப்புக்கென வெளிநாடு செல்லும் அவனுக்கு அவளோடானது அந்த ஒரு இரவு மட்டுமே..
ஆனால் அதுவே கடைசி இரவானது அவன் வாழ்வில்..
இன்றும் பௌர்ணமி இரவு..
அந்த அறைக்குள் நிலவொளி நிறைந்து இருந்தது.. கமலி மனமெங்கும் அந்தக் கடைசி பௌர்ணமி இரவின் ஒளி நிறைந்திருந்தது..
பெருங்குரலெடுத்து அழத்தோன்றியது அவளுக்கு.. ஆனால் மெல்ல மௌனமாக கண்ணீர் வடித்தாள் அவள்..