மணப் பெண்ணில் கைகளில் சிவப்பு மருதானி ஜொலித்துக் கொண்டிருக்க, அவளது கன்னங்களையும் அதற்கே ஏற்றாற் போல சிவக்க வைத்துக் கொண்டிருந்தனர் கூடியிருந்தோர்.
மின்விசிறியின் கீழே கைகளை நீட்டியே வைத்துக் கொண்டிருக்குமாறு அனைவரும் தொல்லை செய்யவே, அவளது கைகள் உடையப் போவது போல வலித்தன.
"சும்மா இரு டி. மருதானி சிவக்குறதுக்குப் பதிலாக கை வீங்கி சிவத்துடும்" என்றாள் ஒருத்தி. அவளை ஜாஸியாவுக்குத் துளியும் பிடிக்கவில்லை. இதுவரை கண்டதுமில்லை.
"ஏன்டி நாளைக்கு உட்காந்திருக்கும் போது சும்மா இருந்தே கை காலெல்லாம் வலி வந்துடும்" என்றாள் இன்னொருத்தி. இவையெல்லாம் காதில் கேட்ட போதிலும் தன் பாட்டில் அமர்ந்திருந்தாள் ஜாஸியா.
சற்று நேரத்தில் இரவுணவு தயார் என்பதற்கு அடையாளமாக வயதில் மூத்த பெண் ஒருவர் வந்து அனைவரையும் அழைத்துச் சென்றார்.
அப்போது தான் ஜாஸியா எலிப்பொறியிலுந்து தப்பிய எலியைப் போன்று நிம்மதியை உணர்ந்தாள். ஆயிஷா மட்டும் புன்னகையுடன் எதிரே அமர்ந்திருந்தாள்.
அவளுக்கும் தான் நாளை திருமணம். அவர்களது பெரிய வீட்டின் மேல் மாடியில் பெண்களுக்கும் கீழ் மாடியில் ஆண்களுக்கும் என்று திட்டமிட்டிருந்தார் ஹாஷிம்.
இரு மணமேடைகள் தயார் நிலையில் கண்களைப் பறிக்கும் அழகுடன் காட்சியளித்தன. அவற்றிலிருந்து மல்லிகையின் மணம் காற்றுடன் கலந்து வந்து நாசியைத் துளைத்தது.
இசை கலவாத இனிமையான அரபுப் பாடல்கள் சில பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவற்றைக் கேட்பவர் யாருமில்லை என்பதை நிரூபிக்கவே பெண்களில் கலகலப்பான பேச்சுக்குரல்கள் ஆங்காங்கே கேட்குக் கொண்டிருந்தன.
ஜாஸியா ஒரு பெருமூச்சை விட்டாள். ஆயிஷா வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்ததை அவள் உணராமல் இல்லை.
"என்ன ஆயிஷா?" புன்னகை சிந்த அவள் கேட்க,
"ஓ... சும்மா தான்" என்று அவளும் பதிலுக்கு நகைத்தாள்.
YOU ARE READING
நிழல் கொடுத்த மரம்✔
Spiritualமுஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும்...