நிஸாவின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் உறவினர்கள் மட்டுமே அந்தப் பெரிய வீட்டில் எஞ்சியிருந்தனர்.
ஜாஸியாவுக்கு தான் என்ன உணர்கிறோம் என்பதே தெளிவாகப் புரியவில்லை.
பக்கத்து வீட்டு பாத்திமா மாமி கொண்டு வந்து தந்த உணவு மேசை மீது பரத்தப்ட்டுக் கிடந்தது.
முன் மண்டபத்தில் சாய்வு நாற்காலியொன்றில் சாய்ந்தவாறு சிந்தனை வயப்பட்டிருந்தார் ஹாஷிம்.
அவர் காதலித்துக் கல்யாணம் செய்த அன்பு மனைவி இனிமேலும் அவருடன் இல்லை என்ற எண்ணமே கண்களில் நீரை வருவித்தது.
இருபத்து ஆறு வருடங்களுக்கு முன்பாக நிஸாவைக் கரம்பற்றிய போது அவளிருந்ததற்கும் நேற்று அவளிருந்ததற்கும் தான் எத்தனை வித்தியாசம்.
ஆரம்பத்தில் தேனும் பாலும் போல இருந்தவர்களிடையே நாளுக்கு நாள் விரிசல் ஏற்பட்டுக் கொண்டே போனது.
"டாடி...." என்ற அழைப்பில் சுயநினைவுக்கு வந்தவர் திரும்பிப் பார்க்க, கையில் தேநீர்க் கோப்பையுடன் நின்றிருந்தாள் அஸ்ரா.
கண்களைத் துடைத்துக் கொண்டவர் அதைப் பெற்றுக் கொண்டு புன்னகைக்க முயன்று தோற்றார்.
இரவானதும் அர்ஷாதா, ஹாஷிம், ஜாஸியா, அஸ்ரா மற்றும் அவளது கணவன் மட்டுமே எஞ்சினர். அத்துடன் ஹாஷிமின் தாயாரான ஆமினாவும்.
ஜாஸியா ஒன்றும் சாப்பிடாமலே இஷாத் தொழுகையுடன் உறங்கி விட்டாள். அஸ்ரா கர்ப்பமாக இருந்தமையால் வற்புறுத்தி அவளைச் சாப்பிட வைத்தார் அர்ஷாதா.
முன் மண்டபத்தில் சோபாவின் சாய்ந்தவாறே உறங்கிப் போனார் ஹாஷிம், கனத்த மனதுடன்.
அன்றைய இரவின் மௌனத்தைக் கலைக்க வௌவால்களுக்கும் ஆந்தைகளுக்கும் கூட மனமில்லை போலும்.
அடுத்த நாளும் விடிந்தது, ஆரவாரமில்லாமல் அமைதியாகவே. குயில்கள் கூவும் ஏப்ரல் மாதம் போலவே இருக்கவில்லை அது.
காலையில் எழுந்தவள் சமையலறைக்குச் சென்றதும் தான் நினைவு வந்தது தாய் இல்லாதது.
YOU ARE READING
நிழல் கொடுத்த மரம்✔
Spiritualமுஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும்...