கடையைப் பூட்டி விட்டு இஷாத் தொழுகையையும் பள்ளியில் நிறைவேற்றியதன் பின் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் ஹாரூன்.
ஹுமைரா மாமியும் ஹாலித் மாமாவும் இப்போது வீட்டுக்கு வந்திருப்பார்கள் என்ற எண்ணமே அவன் மனதில் இருந்தது.
பசி வயிற்றைக் கிள்ளவே வழமைக்கு மாறான வேகத்துடன் வண்டியைச் செலுத்தியவன் இரண்டே நிமிடங்களில் வீட்டையடைந்தான்.
வீட்டுக் கதவை ஸலாம் சொல்லியவாறு திறந்தவன் பதில் சொன்ன தனது தந்தை அய்யாஷைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு உள்ளே நுழைந்தான்.
"வாப்பா, மாமி இன்னும் வரலியா?" என்று சுற்றுமுற்றும் பார்த்தவாறே கேட்டான்.
ஒரு வார மருத்துவ முகாமுக்காக வேறோர் ஊருக்குச் சென்றவர்கள் இன்று வருவதாகக் கூறியிருக்கவே அவ்வாறு கேட்டான்.
"மாமி தொழுறா போல. மாமா பாத்ரூம்ல. சுமையா இங்க தான் இருந்தா..." என்றவாறு சுற்றுமுற்றும் பார்த்தார் அய்யாஷ்.
ஹாரூன் தலையசைத்து விட்டு, வயிற்றைப் பசி கிள்ளுவது தாங்க மாட்டாமல் சமையலறைக்குச் செல்ல எத்தனித்தான்.
நுழைய முன்பே "உம்மா!" எனப் பேசி விட்டு வெளியில் சற்று நேரம் நின்றான். சில வேளை உள்ளே சுமையா இருப்பாள் என்று அவனுக்குத் தெரியும்.
"வாங்க மகன்" என்றவாறு துணியொன்றில் கையைத் துடைத்துக் கொண்டு அவனை நோக்கி வந்தார் தாய் மினா.
அதற்குள் உள்ளேயிருந்த சுமையா எழுந்து சென்றிருந்தாள். மேசையில் சென்று அமர்ந்தவன் ஏற்கனவே அங்கு உட்கார்ந்திருந்த (அய்யாஷின் தாயார்) ஆசியாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.
ஹுமைரா தொழுது முடித்து விட்டு அங்கு வரவும் ஹாரூன் இடியப்பத்தை வாயில் போடவும் சரியாக இருந்தது.
"மாமி!" என்றவாறு எழுந்து நின்றவனை பக்கவாட்டில் அணைத்துக் கொண்டு விட்டு விடுவித்து அமர வைத்தார் ஹுமைரா.
YOU ARE READING
நிழல் கொடுத்த மரம்✔
Spiritualமுஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும்...