நேற்று நிகாஹ் முடிந்ததும் பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர். ஆரம்பத்தில் வேறோரிடம் சென்று தனியே இருக்கப் போகிறோமென்ற பயமாக இருந்த போதிலும், தாயைப் போல் அன்பைப் பொழிந்த மினாவையும், சகோதரியைப் போல ஆதரவளித்த ஹுமைராவையும் பார்க்கையில் அவள் மனம் நிம்மதியடைந்தது.
அவள் இத்தனை வருடங்களாக எதிர்பார்ப்புடன் காத்திருந்த கனவுக் கணவனாக ஹாரூன் இருந்தமை தான் அனைத்தையும் விட அவளுக்கு மகிழ்வளித்தது.
வீட்டை விட்டு வேறோரிடத்தில் இருக்கிறோமென்ற நினைவே வராமல் அவளைக் கரிசனையுடன் பார்த்துக் கொண்டான் அவன். தேவையானவை அனைத்தையும் செய்து கொடுத்தான்.
ஹுமைராவின் மகள்மார் இருவருமான ஐனாவும் சுமையாவும் கூட அவளுடன் நன்கு ஒட்டிக் காெண்டு விட்டனர். ஐனாவின் இரண்டு வயதுக் குழந்தையை ஜாஸியாவுக்கு நன்கு பிடித்துப் போனது.
அன்று காலை வலீமா வைபவத்துக்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். ஹாரூனின் தெரிவு என்று கூறி அழகானதொரு இளம் ஊதா வர்ண உடையினைக் கொண்டு வந்து கொடுத்தார் மினா.
அதை அணிந்து கொண்டு கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துத் தானே சிரித்துக் கொண்டு விட்டு அவளை அழைக்கும் வரை அறையினுள் அமைதியாக அமர்ந்திருந்தாள். அப்போது ஹாரூனும் தயாராகிக் கொண்டு வந்து அருகில் அமர்ந்தான்.
"அழகா இருக்கீங்க ஜாஸியா" அவனது வார்த்தைகளில் அகமகிழ்ந்து போனவள் புன்னகைத்துச் சிவந்தாள்.
அவன் எதிர்பாராத வேளை அவனது கைக்குள் எதையோ வைத்தாள் ஜாஸியா. அதை என்னவென்று பார்த்தால், அவன் ஜாஸியா வீட்டில் தவற விட்டு வந்த புதிய கைக்கடிகாரம்.
"என் வாட்ச். இதை திரும்பவும் காண மாட்டேனென்று தானே நினைத்தேன்" என்று புன்னகையுடன் அதை அணிந்து கொண்டான் ஹாரூன்.
அவர்களது பெரிய வீட்டிலேயே வலீமா வைபவம் நடந்தது. விருந்தினர்கள் அனைவரும் வயிரார உண்டனர். ஜாஸியாவின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
YOU ARE READING
நிழல் கொடுத்த மரம்✔
Spiritualமுஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும்...