நாஸிரின் பெற்றோரிடம் விடயத்தைக் கூறிய போது அவர்களால் நம்பவே முடியவில்லை. அவர்கள் பூப்போன்று வளர்த்த ஒரோயொரு மகன் இப்படிச் செய்து விட்டானே...
வேறு வழியின்றி நாஸிர்-ஜாஸியாவின் திருமணத்தை நிறுத்த ஒத்துக் கொண்டனர். ஜாஸியாவை இழப்பது நாஸிரின் தாய்க்குப் பெரும் கஷ்டமாகவே இருந்தது.
யமீனாவின் மாமா மற்றும் மாமி, அவர்கள் தான் யமீனாவின் கணவனின் பெற்றோர். அவர்களிருவரிடமும் இதைச் சொல்லாமல் மற்றவர்கள் இரகசியமாகப் பேணி வந்தனர்.
யமீனாவின் கணவன் இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கை திரும்புவதாக அழைத்துச் சொல்லியிருக்க, வழக்கமாக துள்ளிக் குதிக்கும் நிஸா கூட அமைதி காத்தார்.
மருமகன் வந்து விட்டால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவரிடம் பேசுவது?
இந்தச் செய்தியைக் கேட்ட யமீனா கூட சோர்ந்து விட்டாள். தனது கணவன் வந்ததும் நன்றாகக் கவனித்து கூடிய சீக்கிரமே அவரைத் திருப்பியனுப்பி விட வேண்டுமென்பது அவளது யோசனை.
ஜாஸியாவுக்கு யமீனாவை நினைத்துத் தான் கவலை. இப்போது யமீனா அங்கு வருவதை அடியோடு நிறுத்திக் கொண்டு விட்டாள்.
அன்று ஹிதாயா அழைத்துத் திருமணம் பற்றி விசாரிக்க, அவளிடம் அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள் ஜாஸியா.
"பார்த்தாயல்லவா ஜாஸி! அல்லாஹ் கைவிட மாட்டானென்று நான் சொல்லவில்லையா? உனக்கேற்ற துணையை அவன் படைத்துத் தான் வைத்திருப்பான்" என்று ஆறுதலாகப் பேசி அவளை சாந்தியடையச் செய்தாள் ஹிதாயா.
ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில், ஒரு நாள் பகல் நாஸிரின் தாயார் நிஸாவுக்கு அழைத்திருந்தார்.
செல்போனை எடுத்துப் பெயரைப் பார்த்த ஜாஸியா ஒரு முகச்சுழிப்புடன் அதை நிஸாவிடம் கையளிக்க, தனது பால்ய வயதுத் தோழி சொன்ன செய்தியில் அதிர்ச்சியானார் நிஸா.
அழைப்பு துண்டிக்கப்பட்டதும் யமீனாவின் மாமிக்கு அழைத்தவர், யமீனாவைப் பற்றி விசாரிக்க, "நானும் உங்களுக்கு கால் பண்ணத் தான் நினச்சன் மதினி. மருமகளக் காலைல இருந்தே காணல்ல. சாப்பாடும் தின்னாம நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு நேரமா காத்துட்டிருக்கோம்" என்று சொல்லிக் கொண்டே போனார்.
YOU ARE READING
நிழல் கொடுத்த மரம்✔
Spiritualமுஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும்...