ஹாஷிம் அடிக்கடி சிந்தனை வயப்படுவதையும் பின்னர் அதிலிருந்து மீண்டு சுற்றுமுற்றும் பார்ப்பதையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள் ஜாஸியா.
ஏனென்று கேட்டால் அவளிடம் சொல்லி விடவா போகிறார்? அவரைப் பார்த்துக் கவலைப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை அவளால்.
அவளது எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் சேர்ந்து தான் அவரை வாட்டுகிறது என்பது அவளறிந்ததே. அதற்கு அவளால் என்ன செய்ய முடியும்?
அஸ்ராவும் பிரசவத் திகதி நெருங்கி வருவதால் இப்போது அடிக்கடி அங்கு வருவதில்லை. ஜாஸியா தான் வேலை முடிந்து வரும் வழியில் சென்று அவளைப் பார்த்து விட்டு வருவாள்.
யமீனாவின் கணவர் தனது மனைவியின் மானக்கேடான செயலையறிந்து வெளிநாட்டிலிருந்து வரும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அங்கேயே இருந்து விட்டார்.
அதையிட்டு வருந்திக் கொண்டிருக்கும் அவனது பெற்றோர் ஹாஷிமுக்குத் திட்டாத திட்டு இல்லை.
இரண்டு பேருக்கு சமைப்பது ஜாஸியாவுக்கு ஒன்றும் கடினமாக இருக்கவில்லை. எனினும், வேலைக்கு ஒரு பெண்ணை எடுத்துக் கொடுத்தார் ஹாஷிம்.
அவள் ஜாஸியாவை விட ஒரு வயது மூத்தவள் எனினும் அவளுக்கு ஒரு நல்ல தோழியாகவே இருந்தாள். காலையில் வந்து மாலையானதும் வீட்டுக்குச் சென்று விடுவாள் அந்தப் பெண்.
அவள் சென்றதும் தனிமை வாட்டுவதை ஜாஸியாவால் தடுக்க முடிவதில்லை. அவ்வப்போது நிஸாவின் நினைவுகளில் கண்ணீர் சிந்தும்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹாஷிம் அவளுடன் வந்து ஒரு முக்கியமான விடயத்தைப் பற்றிப் பேசினார்.
அவளது திருமணத்தைப் பற்றித் தான். அன்று வந்து தங்கிச் சென்ற மூன்று இளைஞர்களுள் ஹாரூன் என்பவராம்.
அதைக் கேட்டதும் அவளது இதயத் துடிப்பு வேகமெடுத்து சைக்கிள் மிதிப்பது போல வீதியிலுள்ள கல் மீதெல்லாம் ஏறி இறங்கிச் சென்றது.
YOU ARE READING
நிழல் கொடுத்த மரம்✔
Spiritualமுஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும்...