"ஜெர்ரி??"
காலையிலிருந்து எங்கெங்கு காணினும் அவன் முகமே தெரிவது ரேணுவுக்கும் அலுத்துவிட்டது. அவனிடமிருந்த ஏதோ ஒன்று நொடிக்கு நொடி தன்முன் ஆங்காரக் கூச்சலிட்டு, தன் இளமைக்காலத்தை, அதில் தான் இழந்தவைகளை பறைசாற்றுவதாகவே தோன்றியது அவளுக்கு. என்னவென்றே புரியாத ஒரு சோர்வு உடலெங்கும் பரவியது.
'என்ன ரேணு இது?? நீ இப்படி இருப்பதில் அவன் பங்கு என்ன இருக்கிறது? காரணமே இல்லாமல் அவன்மேல் ஏன் துவேஷம்?'
மனசாட்சி மட்டும் நியாயம் பேச, பெருமூச்சொன்றை விட்டவள், "சாரி" என்றாள் பொத்தாம்பொதுவாக. எங்கேயோ பார்த்தபடி. இன்னும் உள்ளே பார்த்த காட்சியின் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் நடுங்கிக்கொண்டிருந்தாள் ரேணு.
அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்து அங்கிருந்த சிமெண்ட் பெஞ்ச் ஒன்றில் அமரவைத்து, தன் கோட் பாக்கெட்டில் இருந்த சிறிய தண்ணீர் பாட்டிலைத் தந்தான் ஜெர்ரி.
அவள் இடித்ததில் கீழே விழுந்திருந்த கோப்புகளைத் திரட்டி எடுத்துக்கொண்டு, "ஒரே நிமிஷம், நான் இந்த ஃபைலை உள்ளே குடுத்துட்டு வந்துடறேன்." என்றுவிட்டு, அவளது பதிலுக்குக் காத்திராமல் உள்ளே விரைந்தான்.
இருப்பதா போவதா என அவள் ஆலோசனை செய்துகொண்டிருந்தபோதே, அரை நிமிடத்திற்குள்ளாகவே அவன் வேகமாக வெளியே வந்துவிட்டான்.
"ஏன் இந்தப்பக்கம் வந்த ரேணு? சீஃப் டாக்டரைத் தான பார்க்கப் போன?"
'ஹ்ம்ம்.. ஏதோ உத்தமன் மாதிரி தள்ளியெல்லாம் போனான்.. இப்ப மட்டும் என்ன அக்கறை வந்தது?'
மீண்டும் காரணமின்றி அவன்மீது ஆற்றாமை வளரத்தொடங்க, தலையை பலமாக அசைத்து அவற்றை உதறிவிட்டுத் திரும்பி அமர்ந்தாள் அவள்.
"இல்ல, ஒரு சைக்கியாட்ரிக் டெஸ்ட் எடுக்கணும்.."
கூச்சமும் அவமானமுமாய் அவள் குரல் கிணற்றிலிருந்து ஒலிப்பதுபோல் இருந்தது. ஆனால் ஜெர்ரி எவ்வித ஆச்சரியமோ அருவருப்போ காட்டாமல், "ஓ அப்படியா?" என்றுமட்டும் கேட்கவும், சட்டென அவளது மனதினுள் ஏதோ மாற்றம்.
YOU ARE READING
உயிர்வரை தேடிச்சென்று
Mystery / Thrillerவாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம். என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்...