2

550 37 19
                                    

அலுவலர் கூட்டத்துக்கு அழைப்பு வந்திருந்ததைக் கவனிக்காமல் இருந்துவிட்டது புரிந்து திடுக்கிட்டாள் ரேணு.

'மீட்டிங்கா?? சும்மாவே திட்டுவாங்க, இப்ப மீட்டிங்கை மிஸ் பண்ணிட்டா?'

தலையில் சத்தமாக அடித்துக்கொண்டவள் எழுந்து வெளியே ஓடத்தொடங்க, அதற்குள் கூட்டம் முடிந்ததற்கு அடையாளமாய் அனைவரும் கையில் ஒரு பப்ஸைப் பிடித்துக் கடித்துக்கொண்டு தங்களுக்குள் பேசியபடி திரும்பிவந்துகொண்டிருந்தனர்.

"என்ன ரேணுகா, இன்னிக்கு அட்டெண்டண்ஸ் போச்சா? மீட்டிங் லெட்ஜர்ல சைன் பண்ணலைன்னா இன்னிக்கு சம்பளம் இல்லையாம்!"

நக்கலாகச் சொன்னபடி சக பணியாளர் செல்ல, இன்னும் இருவர் சத்தமாகவே கிசுகிசுத்தனர்.
"பெரிய சேனல்ல வேலபாத்த திமிரு... சம்பளம் போனாதான் திருந்தும்!!"

எழுந்த வருத்தத்தை, கோபத்தை முகத்தில் காட்டாமல், "தட்ஸ் ஆல்ரைட்.. மீட்டிங்ல என்ன சொன்னாங்க?" என்றாள் அவள் நாசூக்காக.

"அதுவா.. நம்ம சேனல்ல சன் நெட்வொர்க்ல இருந்து காப்பியடிச்ச கன்டெண்ட் போடறதால, பல சாட்டிலைட் ஸ்டேஷன்ல நம்ம சேனலை ப்ளாக் பண்ணிட்டாங்க. காப்பிரைட்ஸ் நோட்டீஸ் கூட அனுப்பிருக்காங்களாம். இனி பழையபடி நல்ல நிலமைக்கு வரும்னு யாருக்கும் நம்பிக்கை இல்லை; அநேகமா சேனலை மூடிடுவாங்கனு பேசிக்கறாங்க. ஓனர் திருப்பதில இருக்கார்ல? அவர் வந்து சொல்ற வரைக்கும், காப்பி கண்டெண்ட், காப்பி நியூஸ் எதையும் போடாம, இருக்கற படக்கேசட்டை மட்டும் தேய்க்க சொன்னாரு மேனேஜர்."

'காலையிலிருந்து நீ பார்த்த வேலையெல்லாம் வீணாகப்போனதா? ரேணு.. உன் தரித்திரம் இத்தனை வீரியமானதா? சரிதான்.. அது எத்தனை பாட்டில் சிட்டுக்குருவி லேகியம் தின்கிறதோ..'

எண்ணத்தால் லேசாக அவள் சிரிக்க, அலுவலர்கள் அனைவரும் அவளை வினோதமாகப் பார்க்க, அங்கிருந்து நழுவி மதிய உணவுக்குச் சென்றாள் அவள். தெருவின் முனையில் இருந்த அம்மணி மெஸ் அன்றும் அவளுக்கு அன்னமிட்டது, ஐம்பது ரூபாய்க்கு. ஆண்களாகக் கூடியிருந்த கூட்டங்களுக்கு நடுவே, ஒற்றை நாற்காலியில் அவள் அமர்ந்து கையில் தட்டைப் பிடித்துக்கொண்டு சாப்பிடுவதை, சற்றே வருத்தத்தோடும் வாஞ்சையோடும் பார்த்தார் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் பரிசாரகரான இசக்கி.

உயிர்வரை தேடிச்சென்றுWhere stories live. Discover now