உள்ளே அமர்ந்திருந்த ரேணுவுக்கு திக்கென்று ஆனது. காதைத் தீட்டிக்கொண்டு கவனத்தைக் குவித்துக் கேட்டாள்.
"ஆமா சார்.. இன்ஸ்பெக்டருக்கு வேற வேலை இருக்காமா, அதான் என்னை அனுப்புனாங்க. அதையெல்லாம் கேசா எடுத்துக்கிட்டு விசாரிக்க முடியுமா சார்? வேணாம்னு சொல்லத்தான் வந்தேன்.. மாசத்துக்கு இப்படி ரெண்டு மூணு கேசு வந்துடுது! எங்கயாச்சும் தண்ணிய போட்டுட்டு விழுந்துடுறது, அப்பறம் லாரி ஏறிடிச்சு, கன்டெய்னர் இடிச்சிருச்சுன்னு கேசாகி, நம்ம உயிரை வாங்கவேண்டியது. இன்ஸ்பெக்டர் ஏற்கனவே வந்த மாதவரம் கேஸ்ல பிஸியா இருக்காங்கள்ல? அதான், இதை அப்படியே மூடிட சொல்லிட்டாங்க."
அதற்குமேல் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை அவளால். கண்களை அறையைச் சுற்றித் துழாவினாள். சுவரின் ஒரு மூலையில் ஆணியில் தொங்கியது ஜெர்ரியின் அழுக்கான வெள்ளைக் கோட். யோசிக்காமல் அதை எடுத்து அணிந்துகொண்டு, தனது கைபேசியில் வாய்ஸ் ரெக்கார்டரை ஆன் செய்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வெளியே நடந்தாள்.
ஒரு சப் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் மருத்துவ அட்டெண்டர் ஒருவரும்தான் பேசிக்கொண்டிருந்தனர். அட்டெண்டர் சற்றுத் தூரம் சென்றதும்தான் ரேணு அருகில் வந்தாள். காவலர்கள் அவளைக் கண்டதும் கொஞ்சம் பணிவாகப் பார்த்தனர், அந்த வெள்ளைக் கோட்டினால்.
"வணக்கம் மேடம், சீஃப் டாக்டர் நேத்து இன்ஸ்பெக்டர வரச்சொன்னாராமே, அவங்க வரமுடியல, அதான், நானே வந்தேன். ரிப்போர்ட்சை மட்டும் தந்தீங்கனா.."
"ஏன் சார், கேஸ் டீடெய்ல்ஸ் வேணாமா? இந்த கேஸை கண்டுபிடிக்க மாட்டீங்களா?"
"ஹிஹி.. உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்... எங்களுக்கு ஏற்கனவே நூத்துக் கணக்குல கேசுங்க முடிக்காம இருக்குது. இதுவோ மொட்டை கேஸ். ஒரு துப்பும் கிடையாது. ஏன், செத்தது யாருன்னும் தெரியாது.. கண்டுபிடிக்க எடுத்துக்கிட்டு நாங்கதான் காட்டுக்கும் மேட்டுக்கும் அலையணும். நீங்க ரிப்போர்ட்டை மட்டும் தந்துடுங்க, போதும். கேசை மூடிடலாம்."
YOU ARE READING
உயிர்வரை தேடிச்சென்று
Mystery / Thrillerவாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம். என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்...